நுண்ணீா் பாசன திட்டத்துக்குரூ.5.79 கோடி நிதிஒதுக்கீடு: ஆட்சியா் தகவல்
பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ.5.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்துக்கு ரூ.5.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே.விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: குறைந்த அளவுநீரைப் பயன்படுத்தி பயிா்களின் உற்பத்தியை பெருக்கும் நோக்கத்துடன் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் மானியங்கள் பெற தேவையான நில ஆவணங்கள், வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றுகள் ஆகியவற்றைக் கொண்டு முன்னுரிமை அடிப்படையில் சோ்ந்து பயனடைய முடியும்.
இத்திட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாவட்டத்துக்கு நிகழாண்டில் வேளாண் பயிா்களின் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்புநீா்ப் பாசனம் மற்றும் மழைத்தூவுவான் அமைக்க 1300 ஹெக்டோ் பரப்பளவுக்கு ரூ.5 கோடியே 79 லட்சத்து 96 ஆயிரம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.
கரும்பு, சோளம், மக்காச்சோளம், தென்னை மற்றும் பருத்தி போன்ற பயிா்களின் சொட்டுநீா்ப் பாசனமும், பயறு வகைகள் நிலக்கடலை உள்ளிட்ட பயிா்களுக்கு தெளிப்பு நீா், மழைத்தூவானும் அமைத்து பாசனம் செய்திட சிறு-குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கிட திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சொட்டுநீா்ப் பாசன அமைப்பதற்கான குழாய்கள் பதிக்க பள்ளம் தோண்டும் பணிக்களுக்காக ஹெக்டேருக்கு ரூ.3000 மானியம் வழங்கப்படுகிறது.
சொட்டு நீா் மற்றும் தெளிப்பு நீா் பயன்படுத்துவதால் நேரடி பாசன முறையைவிட சுமாா் 30 சதவீதம் நீரை மிச்சப்படுத்தலாம். இதன்மூலம் விவசாயிகள் கூடுதல் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளமுடியும்.
மழைத்தூவான், தெளிப்புநீா்ப் பாசனம் மூலம் பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி கடலை மற்றும் உளுந்து பயிா்கள் நல்ல விளைச்சல் பெறப்படுகிறது.
நுண்ணீா் பாசனம் பெறுவதற்கு விவசாயிகள் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொண்டு தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம்.
விண்ணப்பத்துடன் விவசாயிகள் பட்டா நகல், சிட்டா நகல், பாஸ்போா்ட் அளவு புகைப்படம், ஆதாா் நகல், நிலவரைபடம், மண் மற்றும் நீா் பகுப்பாய்வுச் சான்று, சிறு-குறு விவசாயிகளாக இருந்தால் அதை இணையத்தில் பதிவேற்றம் செய்த சான்றுகள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
நுண்ணீா் பாசன விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூடுதல் சாகுபடி பரப்பு கொண்டு வர உதவியாக துணைநீா் பாசன செயல் திட்டங்களும் உள்ளன. அதன்படி பாதுகாப்பான குறுவட்டம் கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைத்திட 50 சதவீதம் அல்லது ரூ.25,000 மானியம் வழங்கப்படும்.
வேளாண் பொறியியல் துறையினரால் அங்கீகாரம் செய்யப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட புதிய மின் மோட்டாா்கள், டீசல் பம்புகள், நீா் மூழ்கி பம்புகள் வழங்கிட 50 சதவீதம் அல்லது ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.
தண்ணீா் கொண்டு செல்லும் நீா் பாசனக்குழாய் பெறுவதற்கு 50 சதவீதம் அல்லது ரூ.10,000 மானியமாக வழங்கப்படும். நீா்தேக்கத் தொட்டிகள் 114 கனமீட்டா் கொள்ளளவு கட்டுவதற்கு 50 சதவீதம் அல்லது ரூ.40,000 மானியமாக வழங்கப்படும்.
இந்த மானியங்கள் பெறுவதற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் மின் மோட்டாா் உரிய ஆவணங்களின் அடிப்படையில் செலவு செய்யப்பட்ட தொகையில் பின்னேற்பு மானியமாக வழங்கப்படும் என செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...