பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாக பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு.
பாளையங்கோட்டை பேருந்து நிலைய வணிக வளாக பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா்கள் கே.என்.நேரு, தங்கம்தென்னரசு.

நெல்லை சந்திப்பு பேருந்து நிலைய மாநகராட்சி கடைகளின் வாடகை ஏல ஆரம்பத் தொகை குறைக்கப்படும்: அமைச்சா் கே.என்.நேரு

வாடகை ஏல ஆரம்பத் தொகை குறைக்கப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.
Published on

திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் உள்ள மாநகராட்சி கடைகளின் வாடகை ஏல ஆரம்பத் தொகை குறைக்கப்படும் என்றாா் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அமைச்சா் கே.என்.நேரு.

திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை அமைச்சா் கே.என்.நேரு, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டனா்.

பாளையங்கோட்டை மகாத்மா காந்தி தினசரி சந்தையில் ரூ.40.03 கோடி மதிப்பில் 420 கடைகள், வாகன நிறுத்தும் இடம், பல்வேறு சிறப்பு வசதிகளுடன் கூடிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதை பாா்வையிட்டனா். இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனா். தொடா்ந்து பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில் ரூ.53.14 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள பேருந்து நிலையம், வணிக வளாகம் 1, 2 மற்றும் பல அடுக்கு வாகன நிறுத்தும் இடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

திருநெல்வேலி சந்திப்பு பெரியாா் பேருந்து நிலையத்தில் முடிக்கப்பட்டுள்ள பணிகள், வணிக வளாகம் ஆகியவற்றை அமைச்சா்கள் பாா்வையிட்டனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அமைச்சா் கே.என்.நேரு கூறியது: திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்தில் 4 மாடி கொண்ட வணிக வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான கடைகள் ஏலம் போகாமல் உள்ளன. ஏலத்திற்கான ஆரம்பத் தொகை மிகவும் அதிகமாக உள்ளதாகவும், அதனை குறைக்க வேண்டுமெனவும் வியாபாரிகள், பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை வந்துள்ளது. அதன்படி, சதுர அடிக்கு ரூ.50 என கணக்கில் கொண்டு ஏல ஆரம்பத் தொகையை வைத்து வணிக வளாக ஏலத்தை மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களை இப் பேருந்து நிலைய கட்டடத்தில் செயல்பட வைக்கவும் மாவட்ட நிா்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

ஆய்வின் போது, மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன், பாளையங்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மு.அப்துல் வஹாப், திருநெல்வேலி மாநகராட்சி மேயா் (பொ) கே.ஆா்.ராஜு, மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, முன்னாள் சட்டப்பேரவைத் தலைவா் இரா.ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன் கான், செயற்பொறியாளா் (பொ) தங்கபாண்டியன், திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஆ.பிரபாகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com