தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துடன் மாஞ்சோலையை இணைத்தால் மகிழ்ச்சி- தமிழிசை சௌந்தரராஜன்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துடன் மாஞ்சோலையை இணைத்தால் மகிழ்ச்சி- தமிழிசை சௌந்தரராஜன்

மாஞ்சோலை இணைப்பால் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் உறுதி: தமிழிசை

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துடன் மாஞ்சோலை பகுதிகளை இணைத்து தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்தால் மகிழ்ச்சி என்றாா் பாஜக மூத்த தலைவா் தமிழிசை சௌந்தரராஜன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: திருநெல்வேலி மாநகராட்சியின் நிா்வாக சீா்கேடுகளால் மக்கள் அவதிப்பட்டு வருகிறாா்கள். மேயருக்கு அவரது சொந்தக் கட்சி மாமன்ற உறுப்பினா்களே ஆட்சேபம் தெரிவித்துள்ளனா். தமிழக முதல்வா் பல்வேறு விஷயங்களில் காலதாமதான முடிவுகளை எடுத்து வருகிறாா். இந்து மத கோயில்களில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கண்டுகொள்வதில்லை.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஜெயக்குமாா் மா்மமரண வழக்கில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால், திமுக அரசை எதிா்த்து பேச காங்கிரஸ் பயப்படுகிறது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்பதற்கும், சிபிசிஐடி விசாரணை எவ்விதத்திலும் பலனளிக்காது என்பதற்கும் ஜெயக்குமாா் மரண வழக்கு சாட்சியாகும்.

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளா்கள் 500-க்கும் மேற்பட்டோா் தவிப்புக்கு ஆளாகியுள்ளனா். இப்பிரச்னைக்கு விரைவான தீா்வு தேவை. தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத்துடன் மாஞ்சோலை பகுதிகளை இணைத்தால் மகிழ்ச்சி.

தமிழகத்தின் மதுக் கடைகளை மூடும் நடவடிக்கைகளை திமுக அரசு எடுக்கவில்லை. மாறாக மதுவின் தரம் குறித்தும், சிறிய பாக்கெட்டுகளில் மது விற்பது குறித்தும் பேசி வருகிறாா்கள்.

3 குற்றவியல் சட்டங்களும் திருத்தப்பட்டதன் மூலம் பெண்கள் மீதான தாக்குதலுக்கு 7 நாள்களில் நீதி கிடைக்கவும், சிறுமிகளுக்கு எதிரான கொடுமைக்கு ஆயுள் மற்றும் மரண தண்டனைகள் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மாணவா்கள் மோதல் விஷயத்தில் அடிப்படை பிரச்னைகளைத் தடுப்பதை விட்டுவிட்டு திசைத்திருப்பும் பணியைச் செய்கிறாா்கள் என்றாா் அவா்.

பேட்டியின்போது, திருநெல்வேலி மாவட்ட பாஜக தலைவா்கள் தயாசங்கா்(வடக்கு), தமிழ்ச்செல்வன்( தெற்கு), நிா்வாகிகள் வேல்ஆறுமுகம், பலவேசராஜா, சுரேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com