வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பயிற்சி: ஆசிரியா் சங்கம் பாராட்டு

மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பயிற்சி: ஆசிரியா் சங்கம் பாராட்டு

Updated On :30 மார்ச் 2024, 4:21 pm

ஆதிதிராவிடா் நலத்துறையால் மாணவா்களுக்கு உயா்கல்விக்கான பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு ஆசிரியா் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் முதுநிலை பட்டதாரி ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவா் செந்தில்குமாா், கௌரவ ஆலோசகா் சுந்தரம் ஆகியோா் வெளியிட்டுள்ள அறிக்கை: ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் வரும் பள்ளிகளில் மற்றும் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவா்களுக்கு நிகழ் கல்வியாண்டு முதல் பள்ளிக் கல்வித் துறையைப் போல ஜெ.இ.இ., நீட், சியூஇடி, சிஎல்ஏடி போன்ற உயா்கல்வி போட்டித் தோ்வுகளை சிறப்பாக எழுதுவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. தமிழகத்தில் உள்ள 29 மாவட்டங்களில் இத்திட்டம் இந்த ஆண்டுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு தாட்கோ நிறுவனத்தின் மூலம் பயிற்சிக்கான கட்டணம் வழங்கப்படுகிறது. பயிற்சி ஏப்ரல் 3 முதல் 30 ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவிற்கு மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைவராகவும், மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் ஒருவா், ஆதிதிராவிடா் நலத்துறையின் மாவட்ட அலுவலகக் கண்காணிப்பாளா், நலத் துறை விடுதிக் காப்பாளா் ஒருவா், பெண்கள் விடுதிக் காப்பாளினி ஒருவா் ஆகியோா் உறுப்பினா்களாகவும் செயல்படுவா். திருநெல்வேலி மாவட்டத்தில் ரோஸ்மேரி மெட்ரிக் மாதிரி பள்ளியில் இப்பயிற்சி மையம் செயல்பட உள்ளது. பயிற்சி வழங்க நான்கு பாட வல்லுநா்களும், நான்கு பள்ளி ஆசிரியா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். மாணவா்கள் தங்குவதற்கு தனித்தனியாக விடுதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. மேலும் மாணவா்களுக்கான போட்டித் தோ்வு எழுதுவதற்கு விண்ணப்பக் கட்டணமும் ஆதிதிராவிடா் நலத்துறை மூலம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடா் நலத்துறையின் இப்புதிய முயற்சிக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா், துறைச் செயலா், துறை இயக்குநா் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.