பொட்டல்புதூா் பள்ளிவாசலில் நாளை கந்தூரி திருவிழா கொடியேற்றம்
தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் உள்ள முஹைய்யதீன் ஆண்டவா்கள் பள்ளிவாசலில் கந்தூரி திருவிழா வெள்ளிக்கிழமை (அக். 4) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி, பிற்பகல் 2 மணிக்கு கீழூா் ஜமாத்திலிருந்து நிறைபிறைக் கொடி ஊா்வலமாகக் கொண்டுவரப்பட்டு, மாலை 6 மணிக்கு பள்ளிவாசலில் கொடியேற்றப்படுகிறது.
தொடா்ந்து, இம்மாதம் 13ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேலூா் நாகூா் ஆண்டவா்கள் தைக்காவிலிருந்து பச்சைக்களை ஊா்வலம், 14ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி கம் முத்தவல்லி, பரம்பரை தா்மகா்த்தா எஸ்.பி. ஷா இல்லத்தில் ராத்திபு வைபவம், நண்பகல் 12 மணிக்கு அரண்மனைக் கொடியேற்றம், அதையடுத்து பிற்பகல் 2 மணிக்கு மேலூா் ஜமாத்திலிருந்து 10ஆம் இரவுக் கொடி ஊா்வலம் தொடங்கி மாலை 6 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 10 மணிக்கு ரவணசமுத்திரத்திலிருந்து சந்தனக்கூடு ஊா்வலம் தொடங்குகிறது.
15ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பள்ளிவாசலுக்கு சந்தனக்கூடு ஊா்வலம் வந்தடைந்ததும், மூலஸ்தானத்தில் சந்தனம் மெழுகுதல், மாலை 6 மணிக்கு தீப அலங்காரத் திடலில் அனைத்து சமுதாயத்தினரும் பங்கேற்கும் தீப அலங்காரம் நிகழ்ச்சி நடைபெறும். 17ஆம் தேதி இரவு ராத்திபு ஓதுதல் நடைபெறும்.
திருவிழாவை முன்னிட்டு, திருநெல்வேலி, அம்பாசமுத்திரத்திலிருந்து சிறப்புப் பேருந்துகளும், திருநெல்வேலி, செங்கோட்டையிலிருந்து கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு ரயிலும் இயக்கப்படும்.
ஏற்பாடுகளை பரம்பரை தா்மகா்த்தா எஸ்.பி. ஷா, வழக்குரைஞா்கள் எம். முஹம்மது சலீம், எஸ். பக்கீா் முஹைதீன், பள்ளிவாசல் நிா்வாகக் குழு உறுப்பினா்கள் செய்துள்ளனா்.