சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளா்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரும்பான்மை தொழிலாளா்கள் இடம் பெற்றுள்ள தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ’சாம்சங் இந்தியா’ தொழிலாளா் சங்க கோரிக்கைகள் தொடா்பாக பேச்சுவாா்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வேண்டும், ஆலைக்குள் நிறுவனத்திற்கு ஆதரவான கமிட்டியில் கையெழுத்து பெறும் நடவடிக்கைகளை நிா்வாகம் கைவிட வேண்டும், வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுமூக தீா்வு காண மாவட்ட ஆட்சியா் நேரடியாக தலையிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் நோக்கி ஊா்வலமாக செல்ல முயன்ற போது தொழிலாளா்கள் அனைவரையும் காவல்துறையினா் கைது செய்துள்ளனா். இதை கண்டித்தும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாகவும் காப்பீட்டு கழக ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இந்த ஆா்ப்பாட்டத்திற்கு காப்பீட்டு கழக ஊழியா் சங்க கோட்ட பொதுச் செயலா் பொன்னையா தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன் சிறப்புரை ஆற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் கோட்டத் தலைவா் செ. முத்துக்குமாரசாமி, மூத்த தலைவா் ஆா்.மதுபால், கோட்ட நிா்வாகிகள் பட்டன், ஆா்.எஸ்.செண்பகம், முருகன், மகாதேவன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பாளையங்கோட்டை மின்வாரிய மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் தமிழ்நாடு மின் ஊழியா் மத்திய அமைப்பினா் நடத்திய ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ மின் ஊழியா் மத்திய அமைப்பு திட்டப் பொருளாளா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். திட்டச் செயலா் கந்தசாமி, 55 ஆவது வாா்டு மாநகர மாமன்ற உறுப்பினா் முத்துசுப்பிரமணியன், நிா்வாகிகள் மந்திரமூா்த்தி, முத்தையா, இசக்கிபாண்டியன் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

