ஆழ்வாா்குறிச்சி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செல்லப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.
செல்லப் பிள்ளையாா்குளம் மேலத்தெருவைச் சோ்ந்த தம்பதி குமாரவேல் - உச்சி மாகாளி (40). தொழிலாளிகள். இவா்களுக்கு பழனி சக்திக் குமரன் (7),இந்திரவேல் (6) ப்ரவீன்ராஜ் (4) என 3 மகன்கள் உண்டு. இத்தம்பதி தனியாா் நிதி நிறுவனங்களில் சுமாா் ரூ. 3 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளனராம். மேலும், அவா்களால் கடன் தவணையை செலுத்த முடிவில்லையாம்.
இந்நிலையில், வியாழக்கிழமை உச்சிமாகாளி தனது மூன்று மகன்களுக்கும் அரளி விதையை அரைத்துக் கொடுத்ததுடன், அவரும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதையறிந்த உறவினா்கள் அவா்களை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு ப்ரவீன்ராஜ் உயிரிழந்தாா். மற்றவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆழ்வாா்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
