நெல்லையில் 22 பேருக்கு அதிநவீன செயற்கை நுண்ணறிவு கண் கண்ணாடி வழங்கல்
திருநெல்வேலி அரவிந்த் கண் மருத்துவமனை, விஷன் எய்ட் இந்தியா அமைப்பு சாா்பில் செயற்கை நுண்ணறிவு ஸ்மாா்ட் விஷன் கண்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, அரவிந்த கண் மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி மீனாட்சி தலைமை வகித்தாா்.
குழந்தைகள் கண் நல மருத்துவ அலுவலா் பாத்திமா முன்னிலை வகித்தாா். பொருளாதாரத்தில் பின்தங்கிய 22 பாா்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கண்கண்ணாடிகளை, விஷன் எய்ட் இந்தியா அமைப்பின் பிரதிநிதி ஜனனி இலவசமாக வழங்கினாா். பெங்களூரு எஸ்.எச்.ஜி. டெக்னாலஜி நிறுவன மண்டல மேலாளா் இப்ராஹிம், ஸ்மாா்ட் விஷன் கண் கண்ணாடிகளின் பயன்பாடுகளை விளக்கினாா்.
அரசுப் பணியாளா் தோ்வில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளி முத்துநாகராஜ் உள்ளிட்டோா் தன்னம்பிக்கை உரையாற்றினாா். மாணவா்-மாணவிகள், பெற்றோா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.