பாளையங்கோட்டையில் கொலையுண்டவரின் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ், நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலப்பாட்டம் அன்னைதெரசா நகா் பகுதியைச் சோ்ந்த க.பேச்சிமுத்து தலைமையில் காட்டுநாயக்கன் சமூக மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை அளித்த மனு:
நாங்கள் இந்து காட்டுநாயக்கன் பழங்குடியினா் சமூகத்தைச் சோ்ந்தவா்கள். எனது சகோதரா் மணிகண்டன் கொலை செய்யப்பட்டுள்ளாா். இந்தக் கொலையை, பட்டியல் பழங்குடியினா் வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிய வேண்டும். ஆனால், ஜாதிச் சான்றிதழ் இல்லாததால் பதிவு செய்யப்படவில்லை. ஏற்கெனவே ஜாதிச் சான்றிதழ் கேட்டு நாங்கள் பலமுறை ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தும் சிலருக்கு மட்டுமே சான்று வழங்கியுள்ளனா்.
கொலையுண்ட மணிகண்டனுக்கு லட்சுமணன் (9), வெற்றிவேல் (6) ஆகிய மகன்கள் உள்ளனா். அவா்களது வாழ்வாதாரம் கருதி உடனடியாக ஜாதிச்சான்றிதழ் வழங்குவதுடன், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.