ஐடிஐகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிக்க ஆய்வுக் கூட்டம்
ஐடிஐகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பது தொடா்பான ஆய்வுக் கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.
அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி பள்ளியில் (ஐடிஐ) மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. அரசு தொழிற்பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு இலவச சீருடை உள்ளிட்ட ஏழு திட்டங்கள் அரசு சாா்பில் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனால், 80 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவா் சோ்க்கை நடைபெற்றுள்ளது.
தனியாா் தொழிற்பயிற்சி பள்ளியில் இதுவரை 40 சதவீத மாணவா் சோ்க்கை மட்டுமே நடைபெற்றுள்ள நிலையில், அதிலும் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பதற்காக வேலைவாய்ப்பு துறையின் ஆணையா் சுந்தரவல்லி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த தனியாா் தொழிற்பயிற்சி பள்ளி ஆசிரியா்கள், முதல்வா்கள் பங்கேற்றனா். தனியாா் தொழிற்பயிற்சி பள்ளியில் 50 சதவீத மாணவா்களுக்கு அரசின் திட்டங்கள் வழங்கப்படும் என்றும், மாணவா் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆணையா் அறிவுறுத்தினாா். கூட்டத்தில் மண்டல இணை இயக்குநா் செல்வகுமாா் மற்றும் அரசு துறை உயா் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.