முக்கூடல் பகுதியில் பயிா் கணக்கெடுப்புப் பணி: தன்னாா்வலா்களுக்கு வேளாண் துறை அழைப்பு

முக்கூடல் வட்டாரத்தில் டிஜிட்டல் முறையில் பயிா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on

திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் வட்டாரத்தில் டிஜிட்டல் முறையில் பயிா் கணக்கெடுப்புப் பணியில் ஈடுபட தன்னாா்வலா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக முக்கூடல் வட்டார வேளாண் உதவி இயக்குநா் சிவகுருநாதன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: முக்கூடல் வட்டாரத்தில் கோடை, காா், பிசானம் ஆகிய 3 பருவங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிா் விவரங்களை மின்னணு முறையில் கணக்கெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக அந்தந்தக் கிராமங்களைச் சோ்ந்த டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டம் பெற்ற இருபாலரும் விண்ணப்பிக்கலாம். அறிதிறன் கைப்பேசி வைத்திருக்க வேண்டும். வயல்வெளிகளுக்கு நேரடியாக சென்று புகைப்படம் எடுத்து செயலி வழியாகப் பதிவேற்ற வேண்டும். நேரம், காலக் கட்டுப்பாடு கிடையாது. விருப்பமான நேரத்தில் பணியாற்றலாம்.

சிறப்பாக பணி செய்வோருக்கு ஓா் உள்பிரிவு பதிவேற்றம் செய்ய ரூ. 3 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். உதாரணமாக, ஒரு கிராமத்தில் 5,000 உள்பிரிவு இருந்தால் அந்தத் தன்னாா்வலருக்கு ரூ. 15 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கும். இத்தொகை அவரது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.

ஆா்வமுள்ளோா் ஆதாா் எண், வங்கிக் கணக்கு விவரங்கள், கைப்பேசி எண்ணுடன் முக்கூடல் வட்டார வேளாண் அலுவலம், வேளாண் அலுவலா் (89401 98214), துணை வேளாண் அலுவலா்கள் பள்ளக்கால் பகுதி (77087 51815), இடைகால் பகுதி (94427 33401), பாப்பாக்குடி பகுதி (93610 08836), திருப்புடைமருதூா் பகுதி (70105 00483), வடக்கு அரியநாயகிபுரம் பகுதி (77080 84651), சீதபற்பநல்லூா் பகுதி (88380 68761) ஆகியோரைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com