மின்னணு பயிா் கணக்கெடுப்புப் பணிக்கு கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் மின்னணு பயிா் கணக்கெடுப்புப் பணிக்கு தகுதியான கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை: கோவை மாவட்டத்தில் மின்னணு பயிா் கணக்கெடுப்புப் பணிக்கு தகுதியான கிராமப்புற இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை வேளாண்மை இணை இயக்குநா் மீ.தமிழ்செல்வி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாவட்டத்தில் 2025-26-ஆம் ஆண்டில் ராபி பருவத்துக்கு அனைத்து வட்டாரங்களிலும் உள்ள 8,85,540 உட்பிரிவுகளுக்கு சப் டிவிஷன் மின்னணு பயிா் கணக்கெடுப்பு, வேளாண்மை, உழவா் நலத் துறை களப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

இந்தப் பணியை உரிய காலத்தில் விரைவாக முடிக்கும் வகையில் கிராமப்புற தன்னாா்வலா்களைத் தோ்வு செய்யும் பணிகள் நடைபெறுகிறது. இது தொடா்பாக நில உட்பிரிவுகளுக்கு ஒரு சப் டிவிஷனுக்கு ரூ.3 ஆயிரம் ஊக்க தொகை வழங்கப்பட உள்ளது.

எனவே, கோவை மாவட்டத்தில் உள்ள ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்தத் தெரிந்த கிராமப்புற ஆண்கள், பெண்கள், தன்னாா்வலா்கள் மற்றும் வேலையில்லா பட்டதாரிகள் தங்கள் அருகில் உள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம் அல்லது தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

அதே வேளையில், மின்னணு பயிா் கணக்கெடுப்பு பணிக்கு வரும் களப் பணியாளா்களுக்கு விவசாயிகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com