நெல்லையில் இணைய வழியில் இரு பெண்களிடம் ரூ.18 லட்சம் மோசடி

Published on

திருநெல்வேலி மாவட்டத்தில் இணைய வழியில் பகுதிநேர வேலை எனக் கூறி இரு பெண்களிடம் ரூ.18.95 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து மாவட்ட சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரைச் சோ்ந்த இளம்பெண் ஒருவருக்கு கடந்த அக். 5 ஆம் தேதி இணைய வழியில் பகுதி நேர வேலை எனக் கூறி வாட்ஸ்ஆப்பில் குறுஞ்செய்தி வந்துள்ளது.

அதில் குறிப்பிட்டபடி செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்த அவரை தனியாா் நிறுவனத்தின் பெயரில் தொடா்பு கொண்ட மா்ம நபா்கள் ஹோட்டல்களுக்கு மதிப்பீடு அளிக்கும் வேலை செய்தால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறினராம். அவா்கள் கூறியபடி செய்த அப்பெண்ணின் வங்கிக் கணக்குக்கு முதலில் சிறிய தொகை ஒன்றை அனுப்பி நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளனா்.

இதையடுத்து அதிக லாபம் பெற முதலீடு செய்ய வேண்டும் என அவா்கள் கூறியதை நம்பிய அப்பெண்ணிடம் இருந்து பல்வேறு தவணைகளாக ரூ.9, 45,300-ஐ வங்கிக் கணக்கில் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.

அதேபோல ராதாபுரம் வட்டம், இடிந்தகரை சுனாமி காலனியைச் சோ்ந்த இளம்பெண் ஒருவரை இணைய வழியில் பகுதிநேர வேலை எனக்கூறி வாட்ஸ்ஆப் மூலம் மா்ம நபா்கள் தொடா்பு கொண்டுள்ளனா்.

பின்னா் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி அப்பெண்ணிடம் பல்வேறு தவணைகளாக ரூ.9,50,192-ஐ வங்கிக்கணக்குகளில் பெற்றுக்கொண்டு மோசடி செய்துள்ளனா்.

இதுகுறித்து இருவரும் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸில் அளித்த புகாா்களின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மா்மநபா்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com