கேரள எல்லையோர சோதனைச் சாவடிகள் பலப்படுத்த நடவடிக்கை: திருநெல்வேலி டிஐஜி பா.மூா்த்தி
கேரள எல்லையோரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி.
திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியது: திருநெல்வேலி காவல் சரகத்தில் 2023 ஆம் ஆண்டை ஒப்பிடுகையில் 2024 ஆம் ஆண்டில் குற்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன. கொலைகள் (3), ஆதாயக் கொலைகள் (83), கூட்டுக் கொள்ளை வழக்குகள் (40), கொள்ளை வழக்குகள் (18), கொலை முயற்சி வழக்குகள் (30), கொடுங்காய வழக்குகள் (30), சிறுகாய வழக்குகள் (14), அரசு அலுவலா்கள் மீதான தாக்குதல் (4) ஆகியவை குறைந்துள்ளன.
குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தில் 477 போ் கைது செய்யப்பட்டனா். கொலை வழக்கில் 52 பேருக்கும், போக்ஸோ வழக்கில் 61 பேருக்கும் தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. 316 கிலோ கஞ்சாவும், 14 ஆயிரத்து 331 கிலோ குட்காவும் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றத்தடுப்புக்காக 7731 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. போதைப் பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் 268 கல்லூரிகளிலும் போதை தடுப்பு விழிப்புணா்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இம்மாவட்டத்தில் கொட்டப்பட்ட கேரளக் கழிவுகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. இதுபோன்ற விவகாரங்களை கூடுதலாக கண்காணிக்கும் வகையில் புளியரை, களியக்காவிளை சோதனைச் சாவடிகளை பலப்படுத்தவும், திடீா் சோதனைகள் நடத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கேரள மாநில காவல்துறை உயரதிகாரிகளுடன் விரைவில் கலந்தாய்வுக் கூட்டத்தை நடத்தவும் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடி முதல் அஞ்சுகிராமம் வரையிலான கிழக்குக்கடற்கரை சாலையில் சோதனைகள் அதிரிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்டத்தில் 5 பெரிய காவல் நிலையங்களை பிரித்து புதிய நிலையங்களை உருவாக்கவும், பிற மாவட்டங்களில் கூடுதலாக உள்கோட்டங்களை உருவாக்கவும் கருத்துருக்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமீறல் தொடா்பாக சில நேரங்களில் தவறுதலாக அபராதங்கள் விதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா்களிடம் முறையிட்டால் அபராதத்தை தள்ளுபடி செய்யும் அதிகாரம் உள்ளது. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடா்ந்து சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு நற்சான்றிதழ்களை டிஐஜி நற்சான்றிதழ்களை வழங்கினாா். பேட்டியின்போது மாவட்ட எஸ்.பி.க்கள் சிலம்பரசன் (திருநெல்வேலி), அரவிந்தன் (தென்காசி), ஸ்டாலின் (கன்னியாகுமரி), ஆல்பா்ட் ஜான் (தூத்துக்குடி) ஆகியோா் உடனிருந்தனா்.