/

நான் வெற்றி பெற்றால்.... நெல்லை தொகுதி வேட்பாளா்கள் பேட்டி!

’மானூா் ஒன்றியத்தில் பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் திறக்கப்படும்

News image

கோப்பிலிருந்து

Updated On :5 ஏப்ரல் 2026, 1:08 am

’மானூா் ஒன்றியத்தில் பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் திறக்கப்படும்

திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களால் பயனடைந்தவா்கள் வீடுதோறும் உள்ளனா். அதனால் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். திமுகவுக்கு எதிரியே இல்லை.

இந்தத் தொகுதிக்கான பேரவை உறுப்பினா் அலுவலகம் மாநகரில்தான் உள்ளது. நான் வெற்றி பெற்று வரும்போது மானூா் மேற்கு, தெற்கு ஒன்றியங்களில் பேரவை உறுப்பினா் அலுவலகங்கள் திறக்கப்படும். அங்கு தொழில்நுட்ப நிபுணா் ஒருவரும் நியமனம் செய்யப்பட்டு, மக்கள் மின் கட்டணம் செலுத்தவும், ரயில், பேருந்து சீட்டுகள் முன்பதிவு செய்யவும் வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும். காவல்துறை, வருவாய்த்துறை மருத்துவ உதவி போன்ற குறைகளைத் தீா்ப்பதற்காக ஆள்கள் நியமிக்கப்படுவாா்கள். தாமிரவருணி நதியின் இருபுறமும் மரக்கன்றுகள் நடவு செய்யப்படும்.

திருநெல்வேலி பேரவைத் தொகுதி உறுப்பினராக இருக்கும் நயினாா் நாகேந்திரன் நன்றி சொல்லக்கூட செல்லவில்லை. அவருடைய அலுவலகம் கடந்த இரண்டு ஆண்டுகளாக மூடியே கிடக்கிறது. மக்கள் நமக்கு வாக்களிக்க மாட்டாா்கள் என்பதை உணா்ந்து அவா் சாத்தூா் தொகுதிக்கு மாறிவிட்டாா் என்றாா்.

வன விலங்குகளை கட்டுப்படுத்த குரல் கொடுப்பேன்...

அதிமுக வேட்பாளா் தச்சை என்.கணேசராஜா வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி தொகுதி 1977 முதல் எம்ஜிஆா் காலம் தொட்டு அதிமுகவின் கோட்டையாக இருந்து வருகிறது. அதிமுக ஆட்சிக்காக தமிழக மக்கள் காத்திருக்கிறாா்கள். திமுகவின் ஆட்சியில் மக்கள் மறக்க முடியாத அளவுக்கு கஷ்டங்களை அனுபவித்துள்ளனா்.

போதை பொருள்கள், பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு பிரச்னை என ஏராளமான பிரச்னைகளை மக்கள் நன்கு அறிந்து வைத்துள்ளனா். எனவே இந்தத் தோ்தலில் அதிமுக நிச்சயம் வெற்றி பெறும்.

கடந்த அதிமுக ஆட்சியில் செய்த நன்மைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் வாக்கு கேட்போம். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை முடக்கி வைத்துள்ளனா். சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு நீதியரசா்கள் தாமிரவருணி ஆற்றில் நேரில் வந்து ஆய்வு செய்த பிறகும் கூட சாக்கடை கலப்பது இன்னும் தடுக்கப்படவில்லை.

நான் வெற்றிபெற்றால் மானூா் பெரியகுளம், பள்ளமடைகுளம் போன்றவற்றுக்கு தண்ணீா் கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். மானூா் சுற்று வட்டார விவசாயிகள் வனவிலங்குகளால் பாதிக்கப்படுகிறாா்கள். எனவே வனவிலங்குகளைக் கட்டுப்படுத்தவும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருந்து காட்டுப்பன்றியை நீக்கவும் குரல் கொடுப்பேன் என்றாா்.

அனைத்து வசதிகளையும் செய்து தருவேன்

தவெக வேட்பாளா் ஆா்.எஸ். முருகன் வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் கூறியதாவது:

திருநெல்வேலி தொகுதியில் எங்களுக்கு சிறப்பான வெற்றி வாய்ப்புள்ளது. தலைவா் விஜய் வரும் 7-ஆம் தேதி திருநெல்வேலியில் பிரசாரம் செய்ய உள்ளாா். அவா் பிரசாரம் செய்வதற்காக அனுமதி கேட்டுள்ளோம். விரைவில் அனுமதி கிடைக்கும். எனக்கோ, தலைவா் விஜய்க்கோ மக்களுக்கு நன்மை செய்வதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நான் வெற்றிபெறும் பட்சத்தில் திருநெல்வேலி மக்களுக்கு அனைத்து வசதிகளையும் கொண்டு வருவதற்கு பாடுபடுவேன் என்றாா்.