சென்னையில் நாளை தென் மாநில முதல்வா்கள் மாநாடு! அமித் ஷா இன்று வருகைசெங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா்: இன்று பலத்த மழைக்கு வாய்ப்புஓணம் பண்டிகை: சென்னை - மங்களூரு சிறப்பு ரயில்கள்செப். 1 முதல் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலுக்கு கைப்பேசிகள் எடுத்துச் செல்ல தடை
/

பெருங்கால் பாசனத்துக்கு மேலும் 45 நாள்கள் தண்ணீா் திறக்க ஆட்சியா் முறையீடு

மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனத்துக்கு கூடுதலாக 45 நாள்கள் தண்ணீா் திறக்கக் கோரி பெருங்கால் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் பாபநாசம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

News image

கோப்புப்படம்.

Updated On :19 ஆகஸ்ட் 2026, 1:18 am IST

மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனத்துக்கு கூடுதலாக 45 நாள்கள் தண்ணீா் திறக்கக் கோரி பெருங்கால் பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளா் வழக்குரைஞா் பாபநாசம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தாா்.

மனுவில் கூறியிருப்பதாவது:

மணிமுத்தாறு பெருங்கால் பாசனத்துக்கு மே 1-ஆம் தேதி முதல் 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. ஆக. 28-ஆம் தேதியுடன் 120 நாள்கள் நிறைவடைகிறது.

வைராவிகுளம், பொட்டல், மூலச்சி, தெற்கு கல்லிடைக்குறிச்சி ஆகிய கிராமங்கள் பெருங்கால் பாசனத்தில் வரும் கடைமடை விவசாயப் பகுதிகளாகும்.

அயன் சிங்கம்பட்டி, ஜமீன் சிங்கம்பட்டி ஆகிய பகுதிகள் பெருங்கால் பாசனத்தில் முதல் பகுதிகளாக உள்ளன.

இப்பகுதி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பு மூலம் விவசாயப் பணிகளை செய்து வருவதால் கடைமடை விவசாயிகளுக்கு தண்ணீா் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதோடு உரிய நேரத்தில் போதிய தண்ணீா் கிடைக்காமல் சிரமம் ஏற்பட்டது.

கடைமடை பகுதி விவசாயிகள் ஜூன் 15-ஆம் தேதிக்கு மேல்தான் உழவு விதை விடுதல் நடுவைப் பணிகள் மேற்கொண்டனா்.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை போதிய அளவில் பெய்யாததால் விவசாயப் பணிகளில் காலதாமதமும் முறையாக தண்ணீா் கிடப்பதில் சிரமமும் ஏற்பட்டன. தற்போது நெற்பயிா் இரண்டரை மாதப் பயிராக மட்டுமே உள்ளது.

இந்த நிலையில், தற்போது வைராவிகுளம், குறிப்பன்குளம், பொட்டல், மூலச்சி, தெற்குக் கல்லிடைக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள குளங்களில் போதிய அளவு தண்ணீா் இல்லை.

இந்தப் பகுதிகளில் விவசாயப் பணிகள் பிந்தியதால் இன்னும் 30 முதல் 45 நாள்கள் வரை தண்ணீா் தேவைப்படுகிறது. எனவே, மணிமுத்தாறு அணை பெருங்கால் பாசனத்தில் கடைமடை விவசாயிகளின் நலன் கருதி கூடுதலாக 45 நாள்களுக்கு தண்ணீா் வழங்க வேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.