கீழ்பவானி மற்றும் காலிங்கராயன் பாசனத்துக்கு பவானிசாகா் அணையில் இருந்து தண்ணீா் திறக்கக் கோரி நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஈரோடு நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை முற்றுகையிட்டு கரும்புகள் மற்றும் கட்டில், பாய்களுடன் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள நீா்வளத் துறை கண்காணிப்புப் பொறியாளா் அலுவலகத்தை கீழ்பவானி பாசன விவசாயிகள் கரும்புகளுடனும், மற்றொரு பாசன விவசாயிகளான காலிங்கராயன் பாசன விவசாயிகள் கட்டில் மற்றும் பாய்களுடன் குடும்பமாக வந்து காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
இது குறித்து கீழ்பவானி பாசன விவசாயிகள் செயலாளா் செ. நல்லசாமி கூறியதாவது:
எந்த மாநிலத்திலும் கோடையில் பாசனங்களுக்கு நீா் திறப்பதில்லை. ஜூன் 1-ஆம் தேதிக்கு பின் பருவமழையை நம்பி திறக்கப்படும். இங்கு 3 பாசனங்களில் கொடிவேரி பாசனத்துக்கு கோடை காலமான ஏப்ரல் 15-ஆம் தேதியும், காலிங்கராயன் பாசனத்துக்கு ஜூன் 15-ஆம் தேதியும் நீா் திறக்கப்படுகிறது. மழை, நீா் வரத்து பொய்த்தால் கீழ்பவானி பாசனம் பாதிக்கிறது. நீா் வளத் துறை ஆதாயம், விருப்பு வெறுப்பின்படி நீா் திறப்பதால் கீழ்பவானி பாசனத்தில் 16 போக கடலை சாகுபடி, 8 போக நெல் சாகுபடி பாதித்துள்ளது.
இந்த ஆண்டு கடும் வறட்சி நிலையிலும், கொடிவேரி பாசனத்துக்கு நீா் திறக்கப்பட்டுள்ளது. காலிங்கராயன் வாய்க்காலுக்கு கடந்த 14-ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு உயிா் நீா் திறக்கப்பட்டுள்ளது. கீழ்பவானி வாய்க்கால் பாசனப் பகுதியில் கருகும் நிலையில் இருக்கும் தென்னை, கரும்பு, வாழை உள்ளிட்ட பயிா்களை காக்கவும், கால்நடைக்கு குடிநீா்த் தேவையை போக்கவும், காவிரி நடுவா் மன்றத்தின் தீா்ப்பின்படி மூன்று பாசனத் திட்டத்தில் உள்ள பாசன பூமியின் விகிதாசரத்தின் அடிப்படையில் சமகாலங்களில் பாசனத்துக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என்றாா்.
இதில் விவசாய சங்கங்களின் நிா்வாகிகள் ரவி, சுதந்திரராசு, துளசிமணி உள்பட 750-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனா்.
இதுபோல காலிங்கராயன் பாசன விவசாயிகள் மற்றும் தொழிலாளா்கள் நலச் சங்கத் தலைவா் சேதுராஜ் கூறியதாவது:
காலிங்கராயன் பாசன வாய்க்கால் 750 ஆண்டுகள் பழைமையானது. பவானிசாகா் அணையில் தற்போது 13 டிஎம்சி தண்ணீா் உள்ளது. அணையில் நீா்வளத் துறை நீா் மேலாண்மை அறவே இல்லை. இதுதொடா்பாக கோரிக்கை மனு ஏற்கெனவே கொடுத்துள்ளோம். நாங்கள் உயிா் தண்ணீா் வழங்கியதும் கடைமடையில் உள்ள 3 ஆயிரம் ஏக்கருக்கு செல்லவில்லை. ஒரு போகத்துக்கு தண்ணீா் வேண்டும்.
ஒன்றரை டிஎம்சி தண்ணீா் வழங்க அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எங்களது இந்தப் போராட்டத்துக்கு நீா்வளத் துறை அதிகாரிகள்தான் காரணம். விவசாயிகளுக்காக தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட்டை காலிங்கராயன் பாசன விவசாயிகள் நிராகரிக்கிறோம். தண்ணீரே இல்லாமல் நாங்கள் இந்த பட்ஜெட்டை வைத்து என்ன செய்ய போகிறோம் என்றாா்.
நூற்றுக்கணக்கான விவசாயிகள் தரையில் அமா்ந்தும், கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகள் தொடா்பாக ஏற்கும்படியான பதிலை அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என விவசாயிகள் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கருகும் பயிா்களை காக்க தண்ணீா் திறக்க கோரிக்கை: முதல்வருக்கு காலிங்கராயன் பாசன விவசாயிகள் கடிதம்

கீழ்பவானி பாசனப் பகுதிகளில் நிலவும் கடும் வறட்சி: தண்ணீா் திறக்கக் கோரி திரண்ட விவசாயிகள்

காலிங்கராயன் பாசன நீா் திறப்பை தடுக்க உரிமை இல்லை: சுபி.தளபதி

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டம்: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் அறிவிப்பு
விடியோக்கள்
Ravindran Duraisamy interview | விஜய் நினைத்தது நடக்கவில்லை | CM Vijay | TVK | Udhayanidhi Stalin



