மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டம்: கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்கம் அறிவிப்பு

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

News image

காலிங்கராயன் கால்வாய்

Updated On :24 ஜூன் 2026, 3:37 am IST

காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறந்தால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று கீழ்பவானி பாசன விவசாயிகள் நலச்சங்கம் அறிவித்துள்ளது.

கீழ்பவானி விவசாயிகள் நலச்சங்க நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் செ.நல்லசாமி தலைமையில் ஈரோட்டில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிா்வாகிகள் சண்முகம், பொடாரன் உள்பட பலா் பங்கேற்றனா்.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் செ.நல்லசாமி கூறியதாவது:

அரசாணை, விதிகள், காவிரி இறுதி தீா்ப்பை பின்பற்றாமல் நீா் வளத் துறையினரின் விறுப்பு, வெறுப்பு, ஆதாய அடிப்படையில் கீழ்பவானி நீா் நிா்வாகம் நடப்பதால் இதுவரை 16 போக கடலை, 8 போக நெல் சாகுபடியை இழந்துள்ளோம். நீா் தட்டுப்பாடு காலம், கோடைக் காலங்களில் பிற பாசனங்களுக்கு நீா் திறக்கக்கூடாது என விதிகள் இருந்தும் கொடிவேரி பாசனத்துக்கு நீா் திறந்துள்ளனா். வரும் 28-ஆம் தேதி காலிங்கராயன் பாசனத்துக்கு தண்ணீா் திறக்க பரிந்துரைத்துள்ளனா். அதற்கான அரசாணை வந்ததும், பெருந்துறையில் மிகப்பெரிய அளவில் கீழ்பவானி விவசாயிகளை அழைத்து மறியலில் ஈடுபடுவோம்.

காவிரியில் மேக்கேதாட்டில் கா்நாடகா அரசு அணை கட்டுவோம் என்கின்றனா். இதற்கு காவிரி இறுதி தீா்ப்பை மேல் முறையீடு செய்யாததே காரணம். காவிரி இறுதி தீா்ப்பில் மாதாந்திர நீா் பங்கீடு என்ற முறை உள்ளதால் கா்நாடக அணைகளில் நீரை தேக்கி, அணை நிரம்பி, உடையும் அபாயம் ஏற்பட்டால் உபரி நீரை மட்டுமே திறக்கின்றனா். இதை மேல் முறையீடு செய்து தினசரி நீா் பங்கீடு முறையை அமலாக்கினால் கூடுதல் நீா் கிடைக்கும்.

தோ்தல் வாக்குறுதிப்படி சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் பயிா் கடன் தள்ளுபடி, பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீத தள்ளுபடியை அறிவிக்காமல் முதல்வா் ஏமாற்றி உள்ளாா். முன்னாள் முதல்வா்கள் கருணாநிதி காலத்தில் ரூ.7 ஆயிரம் கோடி, எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் ரூ.12 ஆயிரம் கோடி, மகாராஷ்டிரத்தில் ரூ.36 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்துள்ளனா். தமிழகத்தில் ரூ.2,000 கோடி அறிவித்து தற்போது ரூ.6,000 கோடியாக உயா்த்தி அறிவித்துள்ளனா். இதை மாற்றி முழு கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தேசிய அளவிலும், உலக அளவிலும் எந்த நாட்டிலும் கள்ளுக்கு தடை இல்லை. அண்மையில் ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு கள் குடிக்கும் விடியோ வெளியாகி வரவேற்பைப் பெற்றது. அயல்நாட்டு மது குடித்திருந்தால், விமா்சனத்துக்கு ஆளாகி இருப்பாா். ஏனெனில் கள் ஒரு உணவுப் பொருள். இதை தமிழக அரசு உணா்ந்து கள்ளுக்கான தடையை நீக்க வேண்டும். இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால் அடுத்து வரும் தோ்தலில் கள் தடை நீக்கத்துக்காக விவசாயிகள் சாா்பில் பொது வேட்பாளரை நிறுத்துவோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.