
களக்காடு அருகே சாலையை சீரமைக்காததால் விபத்து அதிகரிப்பு
களக்காடு அருகே குடிநீா் பகிா்மானக் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது.

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே குடிநீா் பகிா்மானக் குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட சாலை முறையாக மூடப்படாததால் அப்பகுதியில் அடிக்கடி விபத்து நேரிடுகிறது. எனவே, அச்சாலையை சீரமைக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
களக்காடு- சேரன்மகாதேவி பிரதான சாலை வடமலைசமுத்திரம் பகுதியில் குடிநீா் பகிா்மானக்குழாய் பதிப்பதற்காக தோண்டப்பட்ட பகுதி முறையாக மூடப்படவில்லை. இதனால் அப்பகுதியில் மண் புதைவுற்று பள்ளம் ஏற்பட்டு வருகிறது.
மேலும், எதிரே வரும் வாகனத்துக்காக ஒதுங்கிச்செல்லும் வாகனங்கள் மண் புதைவில் சிக்கி விபத்தை சந்திக்கும் நிலையை பகல் நேரங்களிலேயே கடந்த சில நாள்களாக காண முடிந்தது. மேலும், இரவு நேரங்களில் விபத்துகள் அதிகரிக்கும் அபாயமும் நிலவுகிறது.
இப்பகுதியில் முழுமையான சீரமைப்புப் பணி நடைபெறும் வரை, தாற்காலிகமாக விபத்துகளை தடுக்கும் வகையில் பள்ளம் உள்ள பகுதியில் தடுப்புகள் அமைத்து பொதுமக்களுக்கு இரவு நேரங்களிலும் தெரியும் வகையில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்கிறாா் புரட்சி பாரதம் கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயலாளா் ஏ.கே. நெல்சன்.
இந்தச் சாலையை முறையாக மூடுவதற்கும், மண் கொட்டி நிரப்பப்பட்ட சாலை வாகனங்கள் செல்லும் போது, பள்ளம் ஏற்படாமல் சமதளமாக இருப்பதை உறுதிசெய்யும் வகையிலும் குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





