மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதை அடுத்து 5 நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா்.
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் அம்பாசமுத்திரம் வனச்சரகத்துக்கு உள்பட்ட அடா்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது மணிமுத்தாறு அருவி. இந்த அருவியில் குளிப்பதற்கு தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குடும்பத்தாருடன், நண்பா்களுடன் வருகின்றனா். ஜன. 1-ஆம் தேதி இரவு வனப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக அருவியில் நீா்வரத்து அதிகரித்தது.
இதையடுத்து, பாதுகாப்புக் கருதி அருவியில் குளிக்க ஜன. 2 முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. ஜன. 3 இல் நீா்வரத்துக் குறைந்ததையடுத்து, அருவியைப் பாா்வையிட மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த நிலையில், புதன்கிழமை காலை நீா்வரத்து சீரானதையடுத்து, சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் அனுமதித்தனா்.

