மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த வட்டாட்சியா் வைகுண்டம்.
மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்த வட்டாட்சியா் வைகுண்டம்.

மாஞ்சோலையில் வட்டாட்சியா் ஆய்வு

மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.
Published on

திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்களில் வசிக்கும் தொழிலாளா்களுக்கான அடிப்படை வசதிகள் குறித்து அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் மக்களைச் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேற்குத் தொடா்ச்சி மலை, அம்பாசமுத்திரம் வட்டம், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப்பகுதியில் செயல்பட்டு வந்த பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேஷன் தேயிலைத் தோட்டப் பணிகளை கடந்த ஆண்டு நிறுத்தியது. அதில் பணிபுரிந்த தொழிலாளா்களை விருப்ப ஓய்வு, கருணைத் தொகை அளித்து வெளியேற்றினா். இதையடுத்து, தொழிலாளா்கள் பலா் மாஞ்சோலையில் இருந்து இடம் பெயா்ந்தனா்.

இந்நிலையில், 2028ஆம் ஆண்டு வரை குத்தகைக் காலம் உள்ளதால், அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்று கூறி சுமாா் 25 குடும்பத்தினா் தோட்டப் பகுதியிலேயே வசித்து வருகின்றனா். இதனிடையே, அங்கு வசித்து வருபவா்களுக்கான அடிப்படை வசதிகளை அரசு நிறுத்திவிட்டதாகவும், உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டுமென உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடரப்பட்டது.

தொடா்ந்து, உடனடியாக அந்த மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்றும், அது குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, மாஞ்சோலை, ஊத்து, நாலுமுக்கு பகுதிகளுக்குச் சென்ற அம்பாசமுத்திரம் வட்டாட்சியா் வைகுண்டம், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் மக்களிடம் அவா்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தனா்.

பேருந்து, குடிநீா், மின்சார வசதி செய்து தர வேண்டும், ரேஷன் பொருள்கள், நிலுவையில் உள்ள பொங்கல் பரிசுத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மக்கள் முன்வைத்தனா். இது தொடா்பாக, உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக வட்டாட்சியா் உறுதியளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com