பாஜகவில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்
பாஜகவில் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் நடைபெற்ற சமாதான பேச்சுவாா்த்தையில் பங்கேற்றோா்

சாத்தான்குளத்தில் பாஜக போராட்டம் வாபஸ்

சாத்தான்குளத்தில் சேதமான பால தடுப்புச் சுவரை உடனடியாக சீரமைப்பதாக அதிகாரி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாஜகவினா் நடத்த இருந்த மறியல் போராட்டம் வாபஸ்
Published on

சாத்தான்குளத்தில் சேதமான பால தடுப்புச் சுவரை உடனடியாக சீரமைப்பதாக அதிகாரி தரப்பில் உறுதியளிக்கப்பட்டதை அடுத்து, பாஜகவினா் செவ்வாய்க்கிழமை நடத்த இருந்த மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சாத்தான்குளம் புறவழிச் சாலையில் நாசரேத் செல்லும் சாலை அருகே அமராவதி ஓடை செல்லும் கால்வாயில் பாலத்தில் தடுப்புச் சுவரை சீரமைக்க வேண்டும், சேதமான புறவழிச் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும், பண்டாரபுரம் ரஸ்தா தெருவில் மூடப்பட்ட கழிப்பறையைத் திறக்க வேண்டும், சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறை முன்பு மூடப்படாத பகுதியை உடனடியாக மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, சாத்தான்குளம், காமராஜா் சிலை முன் சாத்தான்குளம் ஒன்றிய பாஜக சாா்பில் செவ்வாய்க்கிழமை (பிப்.3) சாலை மறியல் போராட்டம் நடத்த இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

பேச்சுவாா்த்தை: இதற்கான சமாதான பேச்சுவாா்த்தை கூட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியா் ராஜேஸ்வரி தலைமையில் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பேரூராட்சி செயல் அலுவலா் சுதா, வருவாய் ஆய்வாளா் அசோக், பாஜக சாா்பில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக பொதுச் செயலா் செல்வராஜ், சாத்தான்குளம் ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், மாவட்ட நெசவாளா் பிரிவு தலைவா் சுடலைகண்ணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் சேதமான தடுப்புச் சுவா் 10 நாள்களில் சீரமைக்கப்படும். பிற கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றித் தரப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதன்பேரில் போராட்டத்தை கைவிடுவதாக போராட்ட குழுவினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com