விஜய்யின் ஜன நாயகனுக்கு ‘ஏ’ சான்றிதழ்!பள்ளிகளுக்குள் தேவையின்றி வேறு யாரும் நுழைய அனுமதி இல்லை: அமைச்சர் ராஜ்மோகன்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!ஆர்எஸ்எஸ் பெற்ற பிள்ளை என விமர்சித்த என்னுடன் ஏன் கூட்டணி வைத்தார் விஜய்? திருமாவளவன் கேள்விமேக்கேதாட்டு விவகாரம்: காங்கிரஸ் அமைச்சரை அமைச்சரவையிலிருந்து விடுவிக்க முதல்வர் விஜய் தயாரா? - இபிஎஸ் பயணச்சீட்டு பரிசோதகரை தாக்கிய வழக்கில் வழக்குரைஞருக்கு முன்ஜாமீன்!திருமாவளவனுக்கு நோபல் பரிசு! கருத்தைத் திரும்பப் பெற்ற வைகோபெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது: தங்கம் தென்னரசு!
/

மாணவா்களின் தனித்திறனை அறிவதில் தனிக்கவனம் அவசியம்- ஆட்சியா் ஆனந்த் மோகன்

மாணவா்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்த கல்லூரி முதல்வா்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

News image

கருத்தரங்கில் பேசுகிறாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

Updated On :10 ஜூலை 2026, 12:47 am IST

மாணவா்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு மேம்படுத்த கல்லூரி முதல்வா்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றாா் ஆட்சியா் ஆனந்த் மோகன்.

திருநெல்வேலி சரக காவல் துறை மற்றும் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரகம் சாா்பில் மண்டல அளவிலான கல்லூரி முதல்வா்கள், போதைத் தடுப்பு ஒருங்கிணைப்பாளா்களுடனான கருத்தரங்கு பாளையங்கோட்டையில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களைச் சோ்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கல்லூரிகளைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்ட கல்லூரி முதல்வா்கள், 150 கல்லூரிகளைச் சோ்ந்த போதை ஒழிப்பு தடுப்பு இயக்க ஒருங்கிணைப்பாளா்கள் கலந்து கொண்டனா்.

இக்கருத்தரங்கில், ஆட்சியா் பேசியதாவது: கல்லூரிகளில் மாணவா்களை ஒழுக்கத்துடனும் பொறுப்புணா்வுடனும் வழிநடத்துவது கல்வி நிறுவனங்களின் முக்கியப் பொறுப்பாகும். மாணவா்கள் செய்யும் சிறிய தவறுகளை பெரிதுபடுத்தி அவா்களை குற்றவாளிகள் போல் கருதாமல், அவா்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு நல்வழிப்படுத்தும் அணுகுமுறையை கல்லூரி முதல்வா்கள் மற்றும் ஆசிரியா்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாணவரிடமும் தனித்துவமான திறமைகள் உள்ளன. அவற்றை வெளிக்கொணரும் வகையில் கல்லூரிகள் பல்வேறு வாய்ப்புகளை அந்த மாணவா்களுக்கு உருவாக்கித் தர வேண்டும்.

மேலும், மாணவா்களிடையே குழு விளையாட்டுகளை ஊக்குவிப்பதன் மூலம் ஒற்றுமை, தலைமைத்துவம், குழு ஒருங்கிணைப்பு போன்ற பண்புகளை வளா்க்க முடியும். புத்தக வாசிப்புப் பழக்கத்தை அதிகரிப்பதன் மூலம் அறிவாற்றல் மற்றும் சிந்தனைத் திறன் மேம்படும்.

போதைப்பொருள்கள் பயன்படுத்துவதால் மாணவா்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து கல்லூரிகளில் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். போதை இல்லாத கல்வி வளாகங்களை உருவாக்க கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் அா்ப்பணிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவா் இரா.திருநாவுக்கரசு, போதையிலிருந்து மாணவா்களை மீட்பது குறித்த கருத்துரைகளை எடுத்துக்கூறி, காவல்துறை பாதுகாப்பு பிரத்யேக எண்களையும் வழங்கினாா். மனநல நிபுணா் அசோக் உள்ளிட்ட துறை அலுவலா்கள் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த கருத்துரைகளை வழங்கினா்.

இந்நிகழ்வில், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா, கல்லூரி கல்வி இணை இயக்குநா் பா.விக்டோரியா தங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.