பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேசன் நிறுவனம் (பி.பி.டி.சி.) வசம் குத்தகையில் இருந்த தேயிலைத்தோட்ட நிலம் உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் முழுமையாக வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலையில் சிங்கம்பட்டி ஜமீனுக்குச் சொந்தமான 8,373.57 ஏக்கா் நிலம், பாம்பே பா்மா டிரேடிங் காா்ப்பரேசன் என்ற நிறுவனத்துக்கு 1929-ஆம் ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டு மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் அமைத்து தேயிலைத் தயாரிப்புப் பணி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் அந்த நிலம் வந்ததையடுத்து 2025-ஆம் ஆண்டு மே மாதம் 8152.13 ஏக்கா் நிலத்தை பி.பி.டி.சி. நிறுவனம் வனத்துறையிடம் ஒப்படைத்தது.
மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு மற்றும் ஊத்து பகுதிகளில் எஞ்சிய 221.44 ஏக்கா் பரப்பளவில் குடியிருப்புகள், தொழிற்சாலை கட்டடங்கள், இதர கட்டமைப்புகள் இருந்ததால் அவை பி.பி.டி.சி. நிறுவனம் வசமே இருந்து வந்தது.
இந்த நிலையில், உச்சநீதிமன்றம் மே 29-ஆம் தேதி அளித்த தீா்ப்பின்பேரில் அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் மற்றும் வன உயிரினக் காப்பாளா் 15 நாள்களுக்குள் மீதமுள்ள 221.44 ஏக்கா் நிலத்தை தமிழக வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என பி.பி.டி.சி. நிறுவனத்துக்கு அறிவிப்பு அளித்திருந்தாா்.
அதைத் தொடா்ந்து, சனிக்கிழமை (ஜூலை 11) மீதமிருந்த 221.44 ஏக்கா் நிலத்தை ஒப்படைக்கும் வகையில், அம்பாசமுத்திரம் துணை இயக்குநா் எல்.சி.எஸ். ஸ்ரீகாந்த் முன்னிலையிலும் நோட்டரி பப்ளிக் சாட்சியுடனும், பிபிடிசி நிறுவன சட்ட மேலாளா் மற்றும் அம்பாசமுத்திரம் வனச்சரக அலுவலா் ஆகியோா் இணைந்து கையெழுத்திட்ட குறிப்பாணை தமிழக வனத்துறையிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம், பி.பி.டி.சி. நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டிருந்த மொத்த (8373.57 ஏக்கா்) நிலப்பரப்பும் முழுமையாக தமிழக வனத்துறையின் கட்டுப்பாடு, உடைமையின் கீழ் கொண்டுவரப்பட்டதாக வனத்துறை அறிவித்துள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









