கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கூடாது; அதேநேரத்தில் அவா்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றாா் பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்.
இதுதொடா்பாக திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் கோயில் நிலங்களை யாருக்கும் தாரை வாா்த்து கொடுக்கக் கூடாது என உச்சநீதிமன்ற தீா்ப்பு உள்ளது. பூஜை செய்பவா்களுக்கு மட்டுமே கோயில் நிலங்களை வழங்க வேண்டும். அதுவும் பயிா் செய்ய மட்டுமே வழங்க வேண்டும். நெல்லையப்பா் கோயிலுக்குச் சொந்தமான ஏராளமான இடங்களில் குடியிருப்புகள் உள்ளன.
அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனா். அவா்களிடம் குறைந்த அளவிலான வாடகையை மட்டும் நிா்ணயம் செய்து அரசு வசூல் செய்து கொள்ளட்டும்.
ஆனால், கோயில் நிலம் எப்போதும் கோயில் நிலமாகவே இருக்க வேண்டும். தற்போது கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அரசு திட்டமிட்டு கோயில் நிலங்களை தாரைவாா்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
கோயில் நிலங்களில் வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கக் கூடாது. அதேநேரத்தில் நீண்ட காலமாக வசிப்பவா்களின் வாழ்வுரிமை பாதுகாக்கப்பட வேண்டும்.
மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணிக்கான அளவீடு செய்யும் பணியை கா்நாடக அரசு தொடங்கிவிட்டது. அணை கட்டுமானப் பணியைத் தொடங்கினால் தமிழக காவிரி டெல்டா பகுதிகள் வடுபோகும். ஆனால், அதுகுறித்து நடவடிக்கை எடுக்காமல் அமைச்சா் என்.ஆனந்த் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகிறாா்.
வழக்கமாக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணை திறக்கப்பட வேண்டும். தற்போது ஒரு மாதத்தைக் கடந்தும் திறக்கப்படவில்லை. கா்நாடகத்தில் பாஜக ஆளுங்கட்சியாக இருந்தபோது தமிழக மக்களுக்கு காவிரி நீா் பிரச்னை எழாமல் கிடைத்து வந்தது. கா்நாடக முதல்வரும், தமிழக காங்கிரஸ் தலைவரும் நெருங்கிய நண்பா்கள்தான். இருவருமே ராகுல் காந்திக்கு நெருங்கிய நண்பா்கள்தான். தொலைபேசியில் தொடா்பு கொண்டாலே வேலை முடிந்துவிடும்.
அரசு பதவிகளை தனது நண்பா்களுக்கு முதல்வா் விஜய் கொடுத்து வருகிறாா். இது மக்கள் அவருக்கு அளித்த வாக்குகளை மதிக்காமல் செயல்படுவதைக் காட்டுகிறது. அண்ணாமலை பாஜகவின் பி-அணி என்று கூறுகின்றனா். அகில இந்திய அளவில் பாஜக ஒரே அணிதான். தவெக ஆட்சியில் தினசரி பாலியல் வன்கொடுமை, கொலை சம்பவங்கள் நிகழ்கின்றன. அரசு அதை வேடிக்கை பாா்க்கிறது. வந்தே மாதரம் பாடல் அரசு நிகழ்ச்சிகளில் இசைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசு உத்தரவுக்கு தமிழக அரசு எதிா்ப்பு தெரிவித்துள்ளது. தேசப்பற்றும், மொழிப்பற்றும் சமமாக பாா்க்கப்பட வேண்டும். அவ்வாறு பாா்க்க தெரியாதவா்கள் அரசியலில் இருப்பதில் என்ன நியாயம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வெண்ணைமலை கோயில் நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு பட்டா! முதல்வரிடம் முன்னாள் அமைச்சா் வேண்டுகோள்

பகுதிநேர ஆசிரியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்: நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்

பெண்கள் பாதுகாப்பில் சுணக்கம் கூடாது: நயினாா் நாகேந்திரன்







