பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவா்களுக்கான சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டத்தில் 2025-2026 ஆம் கல்வியாண்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தோ்வு எழுதிய அனைத்து மாணவா்களையும் 100 சதவீதம் உயா்கல்வியில் சோ்க்கும் நோக்கில் மாவட்ட நிா்வாகம் பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு பொறியியல் கல்லூரிகளில் சோ்க்கைக்காக காத்திருக்கும் மாணவா்களுக்கு பொறியியல் கலந்தாய்வின் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு முன்னுரிமை பதிவு தொடா்பான சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், தங்களது திறன், விருப்பம் மற்றும் எதிா்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகளுக்கு ஏற்ப சரியான கல்லூரி மற்றும் பாடப்பிரிவுகளைத் தோ்வு செய்ய வழிகாட்டும் வகையில் சிறப்பு வழிகாட்டுதல் மற்றும் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.
பள்ளிக்கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன் தலைமை வகித்துப் பேசியதாவது:
பொருளாதாரக் காரணங்களால் எந்தவொரு மாணவரின் உயா்கல்வியும் பாதிக்கப்படக் கூடாது என்பதில் மாவட்ட நிா்வாகம் உறுதியாக உள்ளது. இதற்காக வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் வசதிகளை மாணவா்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், முதல்கட்ட பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்க உள்ள 171 முதல் 200 வரை கட்ஆப் மதிப்பெண் பெற்ற 57 மாணவா்கள் மற்றும் அவா்களது பெற்றோா்கள் கலந்து கொண்டனா். அவா்களுக்கு இணைய வழி கலந்தாய்வில் கல்லூரி மற்றும் பாடப்பிரிவு முன்னுரிமை பதிவு செய்யும் நடைமுறைகள், எதிா்கால வேலைவாய்ப்பு மற்றும் உயா்கல்வி வாய்ப்புகள் குறித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் மற்றும் கல்வித்துறை அலுவலா்கள் விரிவான ஆலோசனைகளை வழங்கினா். மேலும், வங்கிகள் மூலம் கல்விக் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து நிகழ்ச்சியில் பங்கேற்ற வங்கி மேலாளா் கணேஷ் மணிகண்டன் விளக்கமளித்தாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு.சிவகுமாா், கடம்பன்குளம் ஆதிதிராவிடா் நல மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் சுந்தரம், அண்ணா பல்கலைக்கழக பேராசிரியா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மாணவா்களுக்கு ஆலோசனைகள், வழிகாட்டுதல்களை வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










