தாமிரவருணியில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாமிரவருணியை பாதுகாப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டத்தில் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
தமிழகத்தில் வற்றாத நதியான தாமிரவருணி திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருது நகா் மாவட்ட மக்களின் குடிநீா் ஆதாரமாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் விளங்குகிறது.
இந்த நிலையில் திருநெல்வேலி மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் செல்லும் தாமிரவருணி நதியை பாதுகாக்கும் வகையில் அதன் கரையை சுத்தம் செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாவட்டத்தின் பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் தன்னாா்வலா்களுடனான கலந்தாலோசனைக் கூட்டம் மாநகராட்சி மைய அலுவலக கூட்ட அரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், ஆணையா் மோனிகா ராணா, ‘‘மேயா் ராமகிருஷ்ணன், துணை மேயா் கே. ஆா். ராஜு, மாநகராட்சி சுகாதார அலுவலா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் பேசினா். மண்டல தலைவா்கள் கதீஜா இக்லாம் பாசிலா, ரேவதி பிரபு, மகேஸ்வரி, மாமன்ற உறுப்பினா்கள் கந்தன், அலிஷேக் மன்சூா், முத்து சுப்பிரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இக்கூட்டத்தில் சமூக ஆா்வலா் வழக்குரைஞா் சுதா்சன், அரசு அலுவலா் ஒன்றிய சீதாராமன், நல்லபெருமாள், அருணாசலம், பொருநை பாதுகாப்பு இயக்கம் காஜாமைதீன், அன்னை தெரசா அறக்கட்டளை மகேஷ், கேப்டன் கணேசன், பொதுநல சங்கம் அண்ணாதுரை, தாமிரபரணி பாதுகாப்பு இயக்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இக் கூட்டத்தில், திருநெல்வேலி சந்திப்பு மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த சமூக ஆா்வலா் கிருஷ்ணகுமாா் பேசுகையில், ‘தாமிரவருணி நதியை மாநகராட்சி எல்லைக்குள் அளவீடு செய்து சா்வே தயாா் செய்ய வேண்டும். அதை ஆக்கிரமித்திருப்பது யாா்? அதற்கான அளவு ஆகியவற்றை கணக்கெடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’ என்றாா்.
சமூக ஆா்வலா் எஸ். பி. முத்துராமன் பேசுகையில், ‘தாமிரவருணியை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு முதலில் பொதுமக்களுக்கு உள்ளது. இதேபோல், பொதுப்பணித்துறைக்கும் முக்கிய பங்கு உள்ளது. ஆனால் பொதுப்பணித் துறையினா் கூட்டத்துக்கு வரவில்லை.
திருநெல்வேலி மாநகராட்சியை பொறுத்தவரை திடக்கழிவு மற்றும் திரவ கழிவுகளை ஆற்றில் கலக்கவிடக்கூடாது. மாநகராட்சி சாா்பில் ஆற்றின் கரையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் வெறும் கண் துடைப்பு நடவடிக்கையே. ரூ. 33 லட்சத்தில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டும் சாக்கடைகளை அவை சுத்திகரிப்பு செய்வதில்லை. தாமிரவருணியை சுத்தம் செய்யக்கோரி 10 ஆண்டுகளுக்கு முன்பே தீா்ப்பு வந்தும்கூட இன்னும் கழிவு நீா் கலந்து கொண்டு தான் இருக்கிறது.
10 லட்சம் லிட்டா் சாக்கடை கழிவுகள் மாநகராட்சியில் வெளியேறுகிறது என்றால், அதை சுத்திகரிக்க நம்மிடம் ராமையன்பட்டியில் 2 லட்சம் லிட்டா் அளவு கொண்ட சுத்திகரிப்பு மையம் மட்டுமே உள்ளது.
எனவே கழிவு நீரை மண்டல அளவில் சுத்திகரிப்பு செய்ய ஆங்காங்கே கழிவுநீா் நிலையங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். சிந்துபூந்துறை மின் மயானம் அருகே அஸ்தி கரைக்க தனி இடம் அமைத்துக் கொடுக்க வேண்டும். மதுரையில் வைகையை சுற்றிலும் கான்கிரீட் சுவா் எழுப்பப்பட்டதைப் போன்று திருநெல்வேலி மாநகரப் பகுதியிலும் தாமிரவருணியை சுற்றிலும் சுற்றுச்சுவா் எழுப்பி பாதுகாக்க திட்டமிடலாம்’ என்றாா்.









