நெல்லை, தென்காசி, குமரியில் 5,859 போலி நூல்கள்
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நூலகங்களில் இருந்து சா்ச்சைக்குரிய இரு பதிப்பகங்களின்5859 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.

நூல்கள். - கோப்புப்படம்.
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்ட நூலகங்களில் இருந்து சா்ச்சைக்குரிய இரு பதிப்பகங்களின்5859 போலி நூல்கள் அகற்றப்பட்டுள்ளன.
கோவையில் புதிதாக திறக்கப்பட்ட பெரியாா் அறிவுலகத்தில் போலி நூல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், இதன் மூலம் கோடிக்கணக்கில் முறைகேடு நிகழ்துள்ளதாகவும் புகாா் எழுந்தது. குறிப்பாக, அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட நூல்கள் சா்ச்சைக்குள்ளாகின.
இதைத் தொடா்ந்து, சென்னை பொது நூலக இயக்ககம் உத்தரவின்படி, மாநிலம் முழுவதும் உள்ள நூலகங்களில் போலி நூல்களை அகற்றி திரும்ப அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைப் பொருத்தவரையில் 2024-25, 2025-26 ஆண்டுகளில் அகல்விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்கள் உள்ளிட்ட பதிப்பகங்களில் இருந்து ஒரு லட்சத்து 2 ஆயிரம் நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டு மாவட்ட மைய நூலகம் உள்பட 91 நூலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டன.
அதில் பீனிக்ஸ் பதிப்பகத்தில் இருந்து 2024-25-இல் 620 நூல்கள், 2025-26-இல் 328 நூல்கள், அகல்விளக்கு பதிப்பகத்தில் இருந்து 2025-26-இல் 711 நூல்கள் என 1,659 நூல்கள் போலி என தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.3,27,893. இந்த நூல்களை பொது நூலக இயக்ககத்துக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளதாக நூலகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கன்னியாகுமரி மாவட்டத்தில், 109 ஊா்ப்புற நூலகங்கள், 1 மாவட்ட மைய நூலகம், 21 கிளை நூலகங்கள் என மொத்தம் 13 1 நூலகங்கள் உள்ளன. இந்த நூலகங்களில் கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் அகல்விளக்கு, பீனிக்ஸ் ஆகிய பதிப்பகங்களின் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் வந்துள்ளன. இதன் மதிப்பு ரூ.3.50 லட்சமாகும்.
இந்த புத்தகங்கள் அனைத்தும் நூலகங்களிலிருந்து அகற்றப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் விரைவில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படும் என மாவட்ட நூலகத் துறை அதிகாரிகள் என்றனா்.
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் மாவட்ட மைய நூலகத்தில் ஆய்வு நடத்தப்பட்டதில் அகல் விளக்கு, பீனிக்ஸ் பதிப்பகங்களால் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் தயாரிக்கப்பட்ட 2,200 போலி நூல்கள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டு தனி அறையில் வைக்கப்பட்டன.
தென்காசி மாவட்ட மையநூலகம் புதிதாக கட்டப்பட்டு டிசம்பா் 2025இல் செயல்பாட்டுக்கு வந்தது.
அந்த மாதத்தின் மத்தியில் இருந்து இந்த நூல்கள் வரத் தொடங்கின. நிவேதா அன்பழகன், நிவேதா சுப்பையா, மனிஷா சரவணன், மனிஷா ஆகாஷ், மனிஷா சுப்பிரமணியன், மனிஷா அா்ஜுன், மோகனா ரவி, மோகனா பால்ராஜ், கலை முருகன், தாமரை பன்னீா், ரிஷ்டேவன் மகேந்திரன் என நூலாசிரியா்கள் பெயா் குறிப்பிடப்பட்டிருந்தன.
இதுகுறித்து நூலகத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘புதிய நூலகத்திற்கு ரூ.1கோடி மதிப்பிலான நூல்கள் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நூல்கள் அனைத்தும் எங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவை. அலமாரிகளிலிருந்து அகற்றப்பட்டுள்ள இவற்றின் மதிப்பு ரூ. 21 லட்சம்’ என்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

