பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் கட்டுமானத் தொழிலாளர்கள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கட்டுமானத் தொழிலுக்கு தேவையான மணல் இறக்குமதி செய்ய வேண்டும்; அனைத்துக் கட்டுமானப் பணிகளிலும் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 80 சதவீத வேலை ஒதுக்கீடு செய்ய வேண்டும்; எம்-சான்ட் மணல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்கம் சார்பில், தூத்துக்குடி வி.இ. சாலையில் உள்ள நலவாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்க உதவி தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில், கட்டுமானத் தொழிலாளர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர் சங்க வட்டத் தலைவர் கே. உத்தண்டராமன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சேது, ஏஐடியூசி தொழிற்சங்க மாவட்டச் செயலர் க. தமிழரசன் ஆகியோர் பேசினர்.
ஏஐடியூசி மாநிலக் குழு உறுப்பினர் ஜானகி, இந்தியக் கம்யூனிஸ்ட் நகரத் துணைச் செயலர் சங்கரப்பன், விவசாய சங்க ஆவல்நத்தம் கிளைத் தலைவர் லட்சுமணன், கட்டடத் தொழிலாளர் சங்க நிர்வாகக் குழு உறுப்பினர் சுடலைமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, ஏஐடியூசி மாவட்ட பொதுச் செயலர் கிருஷ்ணராஜ் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலர் ராஜகோபால், ஒன்றியச் செயலர் வேம்பரசு, ஏஐடியூசி மாவட்டப் பொருளாளர் பலவேசம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், ஏஐடியூசி மாநில துணைச் செயலர் குருசாமி, மாவட்டச் செயலர் லோகநாதன், கணேசன், மாவட்ட விவசாய சங்கச் செயலர் ராமையா ஆகியோர் கோரிக்கைகளை வலிலியுறுத்தி பேசினர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் ஸ்ரீவைகுண்டம் நகரச் செயலர் நடராஜன், சாத்தான்குளம் நகர துணைச் செயலர் ஜெரால்டு, செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், நாசரேத் உதவி செயலர் உதயகுமார், சின்னமதிக்கூடல் இசக்கிமுத்து, நாசரேத் சுந்தரம், குரும்பூர் ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.