தூத்துக்குடி மாவட்ட உள்ளாட்சி வார்டு மறுவரையறை வரைவு பட்டியல் வெளியீடு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
Updated on
2 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சி வார்டுகளுக்கான மறுவரையறை வரைவு பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மறுவரையறை வரைவு பட்டியலை ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல் பிரிவு) ஏ. லட்சுமணன் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வே. பிச்சை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக மற்றும் நகர்ப்புற வார்டு மறுவரையறை வரைவு பட்டியல் 2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தயார் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி,  தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளும்,  கோவில்பட்டி மற்றும் காயல்பட்டினம் நகராட்சிகளில் 54 வார்டுகளும்,  19 பேரூராட்சிகளில் 294 வார்டுகளும்,  மாவட்ட ஊராட்சியில் 17 வார்டுகளும்,  12 ஊராட்சி ஒன்றியங்களில் 174 வார்டுகளும்,  403 கிராம ஊராட்சிகளில் 2,943 வார்டுகளும் உள்ளன.
மாவட்டத்தில் மொத்த வார்டுகள் எண்ணிக்கையிலும்,  உறுப்பினர்கள் எண்ணிக்கையிலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஒவ்வொரு வார்டிலும் உள்ள மக்கள் தொகையும் ஒரே மாதிரியாக பிரிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வார்டின் அமைப்பும் நிலவரைவியல் ரீதியாக அடக்கமான பகுதியாகவும் அருகருகே உள்ளதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. மறுவரையறை செய்யப்படும் வார்டுகள்,  அவற்றின் நிலவியல் அமைப்பின் அடிப்படையில்,  அந்த உள்ளாட்சியின் பரப்புக்குள்,  வடமேற்கில் தொடங்கி,  தென்கிழக்கில் முடியுமாறு மாறி மாறியும்,  தொடர்ச்சியாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. 
வார்டு மறுவரையறை கருத்துருக்கள் ஜன.2ஆம் தேதி வரை சம்பந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலகங்களிலும்,  வட்டாட்சியர் அலுவலகங்களிலும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றன. 
வரைவு பிரேரணை மீதான மறுப்புரைகள் மற்றும் கருத்துகள் உரிய அலுவலரிடம் ஜன.2ஆம் தேதி மாலை 5.45 மணி வரை நேரிலோ, பதிவஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம். சுய சான்றொப்பமிட்ட ஆவணங்கள் தரப்பட்டிருந்தால் அவை திருப்பித் தரப்படமாட்டாது. 
 மறுப்புரைகள் மற்றும் கருத்துகள் சம்பந்தப்பட்ட வார்டு மறுவரையறை அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு இறுதி அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றார் அவர்.
 


"மறுவரையறை வரைவுமீது ஜன. 2-க்குள் கருத்து தெரிவிக்கலாம்'
ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறுவரையறை வரைவு கருத்துருக்கள் மீது பொதுமக்கள் தங்களது கருத்துகளையும்,  ஆட்சேபங்களையும் ஜன. 2ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் மீதான, தங்கள் கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை தெரிவிக்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் தங்களுடைய கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை எழுத்துப் பூர்வமாக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்,  உதவி இயக்குநர் (ஊராட்சிகள்), மாவட்ட ஊராட்சி செயலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ ஜன. 2ஆம் தேதி மாலை 5.45 மணி வரை தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி: மாநகராட்சி ஆணையரும்,  தனி அலுவலருமான ஆல்பி ஜான் வர்கீஸ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாநகராட்சி வார்டு வரைவு மறுவரையறை கருத்துருக்கள் மாநகராட்சி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளன. இதன் மீதான கருத்துகள் மற்றும் ஆட்சேபங்களை எழுத்துப்பூர்வமாக மாநகராட்சி அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ தெரிவிக்கலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com