திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி திருவிழாவில் பக்தர்களின் தேவைகளை முழுமையான அளவில் பூர்த்தி செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ்க் கடவுளாம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் அழகிய கடற்கரையோரம் அமைந்துள்ளது இரண்டாம் படை வீடான திருச்செந்தூர். இங்கு அசுரர்களிடமிருந்து தேவர்களைக் காக்க, மூலவரான முருகப்பெருமான் அவதாரமெடுத்து, கந்த சஷ்டி விரதமிருந்து, சூரசம்ஹாரம் செய்ததாக தல புராணம் கூறுகிறது.
நவ. 8இல் கந்த சஷ்டி தொடக்கம்: இப்பேறு பெற்ற திருச்செந்தூர் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா, நிகழாண்டில் வருகிற நவம்பர் 8ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவுக்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
குடிநீர், கழிப்பிடம், தங்குமிடம்: கந்த சஷ்டி விழாவில் அனைத்து வயதுடையவர்களும் விரதம் இருப்பது வழக்கமாகும். அவ்வாறு வரும் பக்தர்கள் திருக்கோயிலில் உள்ள விடுதிகள், தனியார் விடுதிகள், திருக்கோயில் பிரகாரங்கள், தற்காலிக பந்தல்கள் போன்றவற்றில் தங்குவர். திருக்கோயிலில் உள்ள விடுதிகள், குடில்கள் போன்றவற்றில் கழிப்பறை வசதி இருந்தாலும், பிரகாரங்கள், வெளியில் தங்குபவர்களுக்கு கழிப்பிட வசதிகள் போதுமானதாக இல்லை. எனவே, கூடுதலான தற்காலிக கழிப்பிட வசதிகள் செய்து, அவை எங்கெங்கு உள்ளன என்பது குறித்து பக்தர்களுக்கு தெரியும் வண்ணம் அறிவிப்பு பதாகைகள் வைக்க வேண்டும்.
திருக்கோயில் உள்பிரகாரங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பக்தர்கள் சார்பில் வழங்கப்படுகிறது. அதுபோல கோயிலைச் சுற்றி வெளியில் விரதம் இருப்பவர்களுக்கும் தேவையான இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
தற்போது மழைக் காலம் என்பதால், கோயில் வளாகங்களில் அமைக்கப்படும் தற்காலிக பந்தல்களை தகரக் கூரையாக அமைக்க வேண்டும்.
மருத்துவம்: விரதமிருக்கும் பக்தர்களுக்காகவும், கூட்ட நெரிசலில் சிக்கும் பக்தர்கள், கடலில் அலையில் சிக்கி காயமடையும் பக்தர்களுக்காகவும் கோயில் வளாகத்தில் அவசர கால மருத்துவனையை விரிவுபடுத்தப்பட்ட வகையில் அமைக்க வேண்டும். ஏனெனில் அரசு மருத்துவத் துறை சார்பில் 108 வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டாலும், கூட்டம் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் போது அந்த வாகனம்கூட கால தாமதமாகத்தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது.
போக்குவரத்து: பக்தர்கள் வசதிக்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வழக்கமான மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் எந்தெந்தப் பேருந்துகள் எந்த நேரம் புறப்படும் என்ற நேரம், வழித்தடம் மற்றும் கட்டணம் குறித்து கோயில் வளாகம் மற்றும் நாழிக்கிணறு பேருந்து நிலையத்தில் தகவல் பலகை வைக்க வேண்டும். பக்தர்கள் வசதிக்காக கூடுதலான சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும்.
பாதுகாப்பு: திருச்செந்தூர் கோயிலில் காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர், தனியார் பாதுகாவலர்கள், ஆன்மிகத் தொண்டர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபடுகின்றனர். மேலும், தலையாய பிரச்னையாக உள்ள போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் ஒருவழிப் பாதையை அமல்படுத்த வேண்டும்.
மேலும், கூட்ட நெரிசலில் திருட்டு மற்றும் கொள்ளை சம்பவத்தை தடுக்கும் நோக்கில் காவல்துறையினர் கூடுதல் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.
தொலைத்தொடர்பு: மூன்று அலைக்கற்றை வரிசை, நான்கு அலைக்கற்றை வரிசை என அதிநவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள போதிலும், கூட்ட நெரிசலில் தொலைத் தொடர்பில் சிக்கல் ஏற்படாத வண்ணம் கூடுதல் தற்காலிக செல்லிடப்பேசி கோபுரங்களை கோயில் வளாகத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆண்டுதோறும் நடக்கும் கந்த சஷ்டி திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து விரதமிருப்பதற்கு, திருக்கோயில் நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகமும் இணைந்தே பல்வேறு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றி வருகிறது. அவ்வாறிருந்தும் ஒருசில நேரங்களில் பக்தர்கள் கூட்ட மிகுதியினால் தேவைகள் கிடைக்கப் பெறாமல் அவதியடைகின்றனர். எனவே, பக்தர்களின் தேவையறிந்து அனைத்து வசதிகளையும் முறையாக செய்து அவற்றை அரசுத் துறையினர் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்பது பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கம்: சாதனை அளவில் வாக்குப்பதிவு! 9 மணி நிலவரம்!!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைந்தது! வெள்ளி விலை?

வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்! இன்று மாலை 6.30 மணிக்குப் பிறகு வெளியாகும்!

மேற்கு வங்க மக்கள் 'சாதனை அளவில்' வாக்களிக்க வேண்டும்: மோடி வேண்டுகோள்
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

