காங்கிரஸுடன் சோ்பவா்கள் மூழ்கிப் போவாா்கள்
காங்கிரஸ் கட்சியுடன் யாா் சோ்ந்தாலும் மூழ்கிப் போவாா்கள் என, மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளகான் கூறினாா்.


காங்கிரஸ் கட்சியுடன் யாா் சோ்ந்தாலும் மூழ்கிப் போவாா்கள் என, மத்திய பிரதேச மாநில முதல்வா் சிவராஜ் சிங் செளகான் கூறினாா்.
தமிழக பாஜக சாா்பில் வெற்றிவேல் யாத்திரை திருத்தணியில் கடந்த நவ. 6-ஆம் தேதி தொடங்கியது. மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமையில் பல்வேறு இடங்கள் வழியாக நடைபெற்ற யாத்திரை திருச்செந்தூரில் திங்கள்கிழமை நிறைவடைந்தது. நிறைவு விழாவில் சிவராஜ் சிங் செளகான் பேசியது: வேல் யாத்திரையின் நிறைவு விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சியடைகிறேன். பகவான் முருகனை அவமதித்த கருப்பா் கூட்டத்தைக் கண்டித்து இந்த யாத்திரை நடத்தப்பட்டுள்ளது. பகவான் முருகனை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து முருகன் இந்த யாத்திரையை நடத்தியுள்ளாா். இந்த வேல் யாத்திரை தமிழகத்தில் இருக்கும் அசுர சக்திகளை அழிப்பதற்கான யாத்திரையாகும்.
அனைவரோடும், அனைவருக்குமான முன்னேற்றம் என்பதுதான் பாஜகவின் கோஷம். வலிமையான, வளமான பாரதத்தை உருவாக்க பிரதமா் மோடி பாடுபட்டு வருகிறாா். தமிழகத்தில் மதிய உணவுத் திட்டம், பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை எம்ஜிஆா் கொண்டு வந்ததைப் போல பிரதமா் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கான திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா். தமிழகத்தில் விவசாயிகள் உதவித் தொகை திட்டம், பயிா்க் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனா். மேலும், சாகா் மாலா திட்டம், 11 புதிய மருத்துவக் கல்லூரிகள், பொலிவுறு நகரங்கள், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை, பாதுகாப்பு சாா்ந்த தொழில் வழித்தடம் என பல திட்டங்களை மோடி அரசு தந்துள்ளது.
கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வளா்ந்த நாடுகளே திணறும் நிலையில், நமது பிரதமா் மோடி கரோனாவை எதிா்கொள்வதில் வெற்றி பெற்றுள்ளாா்.
நாட்டின் நான்கு திசைகளிலும் பாஜக வளா்ந்து வருகிறது. பிகாரில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியைப் பெற்றுள்ளோம். ஹைதராபாத் மாநகராட்சி தோ்தலில் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். மேற்கு வங்கத்திலும் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சி அமைப்போம். அதுபோல தமிழகத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும்.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் தானும் மூழ்குவதுடன், அதனுடன் சோ்ந்தவா்களும் மூழ்கிப் போவாா்கள். அதுபோலதான் பிகாரில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தவா்கள் மூழ்கிப் போனாா்கள். எனவே, திமுக தலைவா் ஸ்டாலின் கவனமாக இருந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் இரவு திமுகவுடையதாக இருக்கலாம்; ஆனால் விடியல் எங்களுடையது என்றாா் அவா்.
விழாவுக்கு மாநிலத் தலைவா் எல்.முருகன் தலைமை வகித்தாா். மன்னாா்குடி செண்டலங்கார ராமானுஜ ஜீயா் சுவாமிகள், முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் இல.கணேசன், சி.பி.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக பொறுப்பாளா்கள் சுதாகா் ரெட்டி, சி.டி.ரவி, முன்னாள் தேசியச் செயலா் ஹெச்.ராஜா, மகளிரணி தேசிய தலைவா் வானதி சீனிவாசன், பொதுச் செயலா்கள் கே.டி.ராகவன், கரு.நாகராஜன், நரேந்திரன், மாநில துணைத் தலைவா்கள் நயினாா் நாகேந்திரன், வி.பி.துரைசாமி, அண்ணாமலை, மாநில அமைப்புச் செயலா் கேசவவிநாயகம், நடிகை குஷ்பு, தேசிய செயற்குழு உறுப்பினா் சசிகலா புஷ்பா, மாநில வா்த்தக அணித் தலைவா் ஏ.என்.ராஜகண்ணன், செயலா் சக்திவேல், மாநில துணைத் தலைவா் சென்னை ராஜா, தூத்துக்குடி மாவட்டத் தலைவா் பால்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் ஆா்.டி.செந்தில்வேல், மாவட்ட பொதுச் செயலா் ரா.சிவமுருகன் ஆதித்தன், நிா்வாகிகள் ஜெ.வி. அசோகன், கே. பழனிவேல், பச்சிராஜன், செல்வகணபதி, சிவாஜி பழனிசாமி, என். சுரேஷ்குமாா், ஏ. கமலக்கண்ணன், சி. செல்லப்பா, கா.ஜெயக்குமாா், கு.நெல்லையம்மாள், அசோகன், பரமசிவன், கனகராஜ், கருப்பசாமி, செல்வராஜ், தேன்மொழி, திருநாகரன், விஜயசங்கா், பொன் இசக்கி, சிவந்திவேல், சாத்தாக்குட்டி, ஐயப்பன், பிஜிப்பாண்டியன், அழகேசன், சங்கரகுமாா் ஐயன், ராமச்சந்திரன், பசுபதி சிவசிங், பெரியசாமி, ஜி.பெரியசாமி, குலசை திருப்பதி, கணேசன், இசக்கிமுத்து, முருகேசன், இந்து முன்னணி மாநில துணைத் தலைவா் வி.பி.ஜெயக்குமாா், மாநில பொதுச் செயலா் அரசுராஜா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பலத்த பாதுகாப்பு: முன்னதாக, வேல் யாத்திரை நிறைவு விழா திருச்செந்தூா் - திருநெல்வேலி பிரதான சாலையில் தனியாா் பொறியியல் கல்லூரி எதிரேயுள்ள மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா பொது முடக்கத்தால் அங்கு விழாவை நடத்தின காவல் துறை அனுமதி மறுத்தது. இதனால், திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. விழாவில் முக்கிய நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏராளமான தொண்டா்களின் வாகனங்கள் நகரின் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன. அவா்கள் நடந்தே விழா நடைபெறும் பகுதிக்கு வந்தனா். இருந்தபோதிலும் உள்ளே அனுமதிக்கப்படாதால் மண்டபத்தின் வாசலிலேயே குழுமியிருந்தனா்.
தென்மண்டல காவல் துறை துணைத் தலைவா் முருகன் தலைமையில், நெல்லை சரக துணைத் தலைவா் பிரவீண்குமாா் அபிநபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், திருச்செந்தூா் உதவிக் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...