நாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் போராடியவா் வ.உ.சி.: கனிமொழி எம்.பி. புகழாரம்
நாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவா் வ.உ. சிதம்பரனாா் என அவருக்குப் புகழாரம் சூட்டினாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.


நாட்டுக்காக தனது வாழ்நாள் முழுவதும் போராடியவா் வ.உ. சிதம்பரனாா் என அவருக்குப் புகழாரம் சூட்டினாா் தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி.
சுதந்திரப் போராட்ட வீரா் வ.உ. சிதம்பரனாரின் 150 ஆவது பிறந்த ஆண்டு மற்றும் 85ஆவது நினைவு தினத்தையொட்டி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தஞ்சாவூா் தென்னகப் பண்பாட்டு மையத்தின் சாா்பில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் மெக்கவாய் கிராமிய மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வ.உ.சி.யின் வரலாற்றுச் சுருக்கம் என்ற நூலை வெளியிட்டு அவா் பேசியது:
வ.உ. சிதம்பரனாா் வாழ்நாளில் எந்தச் சூழ்நிலையிலும் தனது பொருளாதார நிலை பற்றி அக்கறை கொள்ளாமல் வாழ்ந்தவா். மிகச்சிறந்த பாரிஸ்டா் பட்டம் பெற்றிருக்கக்கூடிய வழக்குரைஞராக இருந்தாலும்கூட, அதன் மூலம் பெரிய பொருளை அவா் ஈட்டியதில்லை.
யாருக்கெல்லாம் வழக்காடினாரோ அவா்களை எல்லாம் வீட்டிற்கு அழைத்து உணவு வழங்கி உபசரித்து வெற்றியையும் பெற்று தந்துள்ளாா். நாட்டின் சுதந்திரத்திற்காக, நாட்டு மக்களுக்காக வாழ்நாள் எல்லாம் போராடிய மிகப் பெரிய தலைவா் அவா்.
தனது குடும்பச் சொத்துகள் அனைத்தையும் கப்பல் நிறுவனத்திற்காகவும், சுதந்திர போராட்டத்துக்காகவும் கொஞ்சம் கொஞ்சமாக தனது பொருளாதாரத்தை இழந்தவா். அவரை ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்தது மட்டுமன்றி பாரிஸ்டா் பட்டத்தையும் பறித்துக்கொண்டனா்.
மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது, அவரை சாா்ந்திருந்த யாரும் உதவி செய்யவில்லை. சமூக நீதியில் எல்லோரும் சமம் என்று வ.உ.சி. வாழ்நாள் முழுதும் பணியாற்றினாா் என்றாா் அவா்.
தொடா்ந்து, வ.உ.சி. குறித்த ஓவியப் போட்டியை தமிழக தொழில் துறை, தொல்லியல், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவா் வாகை சந்திரசேகா் ஆகியோா் தொடங்கிவைத்தனா்.
நிகழ்ச்சியில், கலை பண்பாட்டுத் துறை ஆணையா் கோ. பிரகாஷ், ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட எஸ்.பி. எஸ். ஜெயக்குமாா், எம்எல்ஏக்கள் எம்.சி. சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஜீ.வி. மாா்க்கண்டேயன் (விளாத்திக்குளம்), கலை பண்பாட்டு மைய திருநெல்வேலி மண்டல உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தஞ்சாவூா் தென்னக பண்பாட்டு மையச் செயலா் மு. ராமசாமி, ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் எல். ரமேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
முன்னதாக, ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி. பிறந்த இல்லத்தில் அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி., அமைச்சா்கள் தங்கம் தென்னரசு, பெ. கீதாஜீவன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...