தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை; 2 பேர் கைது
By DIN | Published On : 17th March 2021 02:14 PM | Last Updated : 17th March 2021 02:14 PM | அ+அ அ- |

தூத்துக்குடி: தூத்துக்குடியில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கொலை தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன் (50), சமையல் தொழிலாளி. டூவிபுரம் முதல் தெருவில் உள்ள சேர், சமையல் பாத்திரங்களை வாடகைக்கு விடும் கடையில் வேலைபார்த்து வந்தார். அதே தெருவைச் சேர்ந்த வேல்சாமி (50) என்பவர் அந்த கடையின் முன்பு மர ஸ்டூல் கட்டில் விற்பனை செய்து வருகிறார். இங்கு ஆழ்வார்திருநகரி விஸ்வபுரத்தைச் சேர்ந்த கணேசன் (38) என்பவர் தச்சராக வேலைபார்த்து வருகிறார்.
இவர்கள் மூவரும் இரவில் மது அருந்துவது வழக்கமாம். செவ்வாய்க்கிழமை இரவு மதுபோதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் மாரியப்பன் ட்ரை சைக்கிளில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது, அங்கு வந்த வேல்சாமியும், கணேசனும் சேர்ந்து மாரியப்பனை கம்பால் சராமாரியாக தாக்கினார்களாம். இதில், சம்பவ இடத்திலேயே மாரியப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து மத்தியபாகம் போலீசார் சம்ப இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் வேல்சாமி, கணேசனை போலீசார் கைது செய்தனர். சம்பவ இடத்தை தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார், டவுண் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.