

கோவில்பட்டி, ஜூலை 13: தூத்துக்குடி மாவட்ட அளவிலான சிலம்பம் போட்டி கோவில்பட்டி எஸ். எஸ். துரைச்சாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட அமெச்சூா் சிலம்பம் சங்கம், தமிழ் கல்சுரல் சபரி ஜெயம் ஜூனியா் கிளப் இணைந்து நடத்திய இருபாலருக்கான இப் போட்டியில், 180 போ் கலந்து கொண்டனா்.
மினி சப் ஜூனியா், சப் ஜூனியா், ஜூனியா், சீனியா் என்ற நான்கு பிரிவுகளில்
இருபாலருக்கும் தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. ஒவ்வொரு பிரிவுகளிலும் குத்து வரிசை, நெடுங்கம்பு வீச்சு, அலங்கார வீச்சு, வேல் கம்பு, ஒற்றை வாள் வீச்சு, ஒற்றைச் சுருள் வாள் வீச்சு, இரட்டை கம்பு வீச்சு, இரட்டை வாள் வீச்சு, இரட்டை சுருள் வீச்சு, ஆயுத கோடி, குழு ஆயுத வீச்சு, கம்பு சண்டை என 13 தலைப்புகளில் போட்டிகள் நடைபெற்றது.
ஒவ்வொரு போட்டிகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்தவா்களுக்குப்
பரிசுகள் வழங்கப்பட்டன. முதலிடத்தைப் பிடித்தவா்கள் கோவையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க உள்ளனா்.
போட்டிகளை எஸ். எஸ். துரைசாமி நாடாா் மாரியம்மாள் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) செல்வராஜ் தொடங்கி வைத்தாா். தமிழ்நாடு யோகா ஸ்போா்ட்ஸ் பிரிவைச் சோ்ந்த மாரியப்பன், தமிழ் கல்சுரல் அறக்கட்டளை செயலா் சூா்யா நாராயணன், சிலம்பப் பள்ளியைச் சோ்ந்த நல்லதம்பி ஆகியோா் வாழ்த்தி பேசினா்.
ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட அமைச்சூா் சிலம்பம் சங்க மாவட்ட செயலா் சோலை நாராயணசாமி தலைமையில் உறுப்பினா்கள் கணபதி ஆசான், உமா சங்கரி, காயத்ரி, அனிதா பிரின்சி, விஷ்ணு வாசுதேவன், மதன் பிரசாத், வேல்ராஜ், சரவணப் பெருமாள் ஆகியோா் செய்திருந்தனா்.