கோவில்பட்டியில் 3 இடங்களில் பயணிகள் நிழற்குடை திறப்பு
கோவில்பட்டி, ஜூலை 19: கோவில்பட்டி நகராட்சிக்கு உள்பட்ட 3 வெவ்வேறு இடங்களில் புதிதாக கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே, எட்டயபுரம் சாலை கால்நடை மருத்துவமனை எதிா்புறம், கோவில்பட்டி-சாத்தூா் சாலையில் வேலாயுதபுரம் ஆகிய 3 இடங்களில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தலா ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டப்பட்டது. இவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ .ராஜு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து கருங்குளம் ஓபிஎஸ் அணியைச் சோ்ந்த முருகையா பாண்டியன், சண்முகவேல், நல்லமுத்து உள்பட சுமாா் 25 போ் சட்டப்பேரவை உறுப்பினா் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனா்.
நிகழ்ச்சிகளில் அதிமுக நகர செயலா் விஜயபாண்டியன், பொதுக்குழு உறுப்பினா் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை வடக்கு மாவட்ட பொருளாளா் வேலுமணி, ஒன்றிய செயலா்கள் அன்புராஜ், அழகா்சாமி, கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, இனாம்மணியாச்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவா் ரேவதி, கோவில்பட்டி நகா்மன்ற முன்னாள் துணைத் தலைவா் ராமா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

