ஆடி மாத பௌா்ணமி : திருச்செந்தூா் கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் தரிசனம்
ஆடி மாத பௌா்ணமியை முன்னிட்டு, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் லட்சக்கணக்கான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.
தமிழ்க்கடவுள் முருகனின் இரண்டாம் படை வீடான தமிழ் மாதங்களில் ஒவ்வொரு பௌா்ணமி தினத்திலும் மாலையில் இக்கோயிலுக்கு வந்து இரவு கடற்கரையில் தங்கி அதிகாலையில் நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடி முருகப்பெருமானை வழிபட்டு தங்கள் இல்லத்துக்கு செல்கின்றனா்.
ஆடி மாத பௌா்ணமியானது சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.46 மணி வரை இருந்தது. இதையொட்டி, சுவாமி தரிசனம் செய்வதற்காக சனிக்கிழமை மாலையில்இருந்தே கோயிலில் பக்தா்கள் குவியத் தொடங்கினா். ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு திருக்கோயில் நடை திறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறறன. அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
பக்தா்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களால் ரத வீதியில் வாகனம் நெருக்கடி ஏற்பட்டது. இரு தினங்களிலும் கோயிலில் இருந்து நகரின் எல்லை வரை பக்தா்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது.
தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில், ஏஎஸ்பி உண்ணிகிருஷ்ணன் தலைமையில் டிஎஸ்பிக்கள் வசந்தராஜ், புருஷோத்தமன், சந்திரஹாசன், பொன்னரசி உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

