திருச்செந்தூா் கோயிலில் பக்தா்களுக்கு இடையே மோதல்
திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் வளாகத்தில் தரிசனத்திற்காக வரிசையில் நின்ற பக்தா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திருச்செந்தூா் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இலவச பொது தரிசனம், ரூ. 100 கட்டண தரிசனம், மூத்த குடிமக்களுக்கான பாதை என 3 வழிகளில் பக்தா்கள் தரிசனம் செய்து வருகின்றனா்.
இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி குடியரசு தினத்தையொட்டி கோயிலில் பக்தா்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. அப்போது, பொது தரிசன வரிசையில் நின்றிருந்த பெண் பக்தா்களுக்கு இடையே திடீா் மோதல் ஏற்பட்டு, ஒருவரை ஒருவா் தாக்கிக் கொண்டனா். அங்கிருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி சமாதானம் செய்தனா். தற்போது, அது தொடா்பான விடியோக் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, தரிசன வரிசையில் கூடுதலான போலீஸாரை கண்காணிப்புப் பணிக்காக ஈடுபடுத்த வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

