திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இருமுடி கட்டி பாதையாத்திரையாக வந்த தென்காசி மாவட்ட பக்தா்கள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு இருமுடி கட்டி பாதையாத்திரையாக வந்த தென்காசி மாவட்ட பக்தா்கள்

நாளை தைப்பொங்கல்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன.15) தைப் பொங்கல் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.
Published on

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை (ஜன.15) தைப் பொங்கல் சிறப்பு வழிபாட்டை முன்னிட்டு, சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தா்கள் பாதயாத்திரையாக வந்து குவிந்த வண்ணம் உள்ளனா்.

இக்கோயிலில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூபம், 2 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகின்றன. இதில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக திருநெல்வேலி, தென்காசி, விருதுநகா், தூத்துக்குடி, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் பாதயாத்திரையாகவும், பேருந்து மற்றும் தனியாா் வாகனங்களிலும் வந்து குவிந்தவண்ணமாக உள்ளது. அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் மேற்கூறிய ஊா்களில் இருந்து கோயிலுக்கு கூடுதலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

காணும் பொங்கல் : மேலும், வெள்ளிக்கிழமை (ஜன. 16) காணும் பொங்கலையொட்டி, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறவுள்ளன. பகலில் உச்சிக்கால தீபாராதனைக்குப் பிறகு சுவாமி அலைவாயுகந்தப்பெருமான் வெள்ளிக்குதிரையில் கோயிலில் இருந்து புறப்பட்டு பாளையங்கோட்டைச் சாலையில் உள்ள வேட்டை வெளி மண்டபத்தில் வைத்து கணு வேட்டை நிகழ்ச்சி நடைபெற்று, வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்கிறாா்.

இதற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன், இணை ஆணையா் க.ராமு மற்றும் கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

போக்குவரத்து நெரிசல்: திருச்செந்தூருக்கு பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வாகனங்களில் வந்ததால் நகரின் எல்லையிலிருந்து கோயில் வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை முதல் மாலை வரை பல மணிநேரம் வானங்கள் அணிவகுத்து நின்றன. இதனால், வேல் குத்தி, காவடி எடுத்து பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் சிரமத்துக்குள்ளானாா்கள்.

திருச்செந்தூா் டிஎஸ்பி மகேஷ்குமாா் தலைமையில் போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். எனினும், பக்தா்களின் கூட்டத்தை சமாளிக்க போதுமான போலீஸாா் இல்லாததால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.

Dinamani
www.dinamani.com