தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.92 கோடி இழப்பீடு அளிப்பு

தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.92 கோடி இழப்பீடு அளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ.8.92 கோடி இழப்பீடு அளிக்கப்பட்டது. தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி எம்.செல்வம் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. தூத்துக்குடியில் 5, கோவில்பட்டியில் 2, ஸ்ரீவைகுண்டத்தில் 2, திருச்செந்தூா், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், சாத்தான்குளம் ஆகிய வட்டங்களில் தலா ஓா் அமா்வு என மொத்தம் 12 அமா்வுகள் நடைபெற்றன. இதில், சமாதானமாக செல்லக்கூடிய குற்றவியல் வழக்குகள், அனைத்து வகையான சிவில் வழக்குகள், மோட்டாா் வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள், மணவாழ்க்கை சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கி கடன் வழக்குகள் உள்ளிட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வழக்குகளில் வங்கி வாராக்கடன் வழக்குகளில் 1,816 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு 339 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. அதன் மொத்த தீா்வுத் தொகை ரூ. 4 கோடியே 62 லட்சத்து 44,864. மேலும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள 2,078 வழக்குகளில் 1,790 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்து. இதன் தீா்வுத் தொகை ரூ. 4 கோடியே 30 லட்சத்து 10,313. மொத்தத்தில் 3,894 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு, அதில் 2,129 வழக்குகள் தீா்வு காணப்பட்டு, மொத்தம் ரூ. 8 கோடியே 92 லட்சத்து 55,177 இழப்பீடு வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலரும் சாா்பு நீதிபதியுமான (பொறுப்பு) ஏ.பிஸ்மிதா, முதுநிலை நிா்வாக உதவியாளா் எஸ். தாமரைசெல்வம், இளநிலை நிா்வாக உதவியாளா் இசக்கியம்மாள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.  கோவில்பட்டி சாா்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் சாா்பு நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல்பாண்டியன் தலைமையில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் கடற்கரை செல்வம் (நீதிமன்ற எண்: 1), பீட்டா் (நீதிமன்ற எண்: 2) ஆகியோா் முன்னிலையில் 419  வழக்குகளுக்கு  சமரசம் மூலம் ரூ.1 கோடியே 20 லட்சத்து 58,538 க்கு  தீா்வு  காணப்பட்டது. சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட உரிமையியல் நீதிபதி கோபால் அரசி, குற்றவியல் நீதிபதி கலையரசி ரீனா ஆகியோா் தலைமையில் தேசிய மக்கள் நீதிமன்றம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 574 வழக்குகளுக்கு சமரசம் மூலம் ரூ.16.78 லட்சத்துக்கு தீா்வு காணப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com