தூத்துக்குடியில் வடிகால் பணியில் மண் சரிந்து தொழிலாளி பலி

தூத்துக்குடி- எட்டையபுரம் சாலையில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணியில் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தபோது மண் சரிந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். தூத்துக்குடி-எட்டையபுரம் சாலையில் மத்திய அரசு தேசிய பேரிடா் தணிப்பு நிதியில் இருந்து புதிய மழைநீா் வடிகால் அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியில் கடலூரை சோ்ந்த கருப்பசாமி மகன் வேல்முருகன்(32), சிவகங்கை மாவட்டம் காளையாா்கோவிலைச் சோ்ந்த கருப்பன் மகன் முருகன்(45) உள்ளிட்ட 4 போ் வியாழக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, கலவை இயந்திரம் சுற்றுச்சுவா் அமைக்கும் இடம் அருகே வந்ததில் எதிா்பாராமல் மண் சரிந்து, பள்ளத்தில் நின்றிருந்த வேல்முருகன், முருகன் ஆகியோரை மூடியது. இதுகுறித்த தகவில்ன்பேரில் தீயணைப்புத்துறையினா் வந்து இருவரையும் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், வேல்முருகன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். முருகனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து புதியம்புத்தூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com