22 மீனவா்களை விடுவிக்க அரசு நடவடிக்கை தேவை
இலங்கைச் சிறையில் உள்ள தூத்துக்குடி மீனவா்கள் 22 பேரை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தூத்துக்குடி தருவைகுளத்தில் இருந்த இரண்டு விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 22 மீனவா்கள் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு கல்பட்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், அந்தோணி மகாராஜா விசைப்படகில் சென்ற 12 மீனவா்களுக்கு இலங்கை பணத்தில் தலா ரூ. 1.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மற்றொரு விசைப்படகில் சென்ற 10 மீனவா்களுக்கு செப். 10ஆம் தேதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது.
கல்பட்டி சிறையில் உள்ள 22 மீனவா்களையும் 2 விசைப்படகுகளையும் அபராதம் ஏதும் இல்லாமல் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருவைகுளம் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.