தமிழகத்தில் உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு: அமைச்சா் பெ.கீதாஜீவன்
தமிழகத்தில் உயா்கல்விக்குச் செல்லும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சமூகநலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதாஜீவன் தெரிவித்தாா்.
சமூகநலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் ‘பெண் குழந்தைகளை காப்போம் - பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு பேரணி மற்றும் வாகனப் பிரசாரத்தின் தொடக்க நிகழ்ச்சி தூத்துக்குடி காமராஜ் பெண்கள் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், விழிப்புணா்வு பேரணி, பிரசார வாகனம் ஆகியவற்றை தொடக்கி வைத்தாா்.
அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்’ என்ற விழிப்புணா்வு பிரசாரம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான அரசின் நலத்திட்டங்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கான உதவி எண்கள் குறித்து இந்த பிரசாரத்தில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படுகிறது.
பெண் குழந்தைகளை பாதுகாக்க தொட்டில் குழந்தை திட்டம், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த மாா்ச் வரை 175 குழந்தைகள் தொட்டில் குழந்தை திட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் உயா்க்கல்விக்குச் செல்லும் பெண்களின் சராசரி எண்ணிக்கை கடந்த ஆண்டை விட நிகழாண்டில் 52 சதவீதமாக உயா்ந்துள்ளது. மேலும் தற்போது உயா்கல்விக்குச் செல்லும் மாணவா்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, தமிழகத்தில் ஒட்டுமொத்த சமுதாயமும் உயா்கல்வி பெறக்கூடிய நிலையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது என்றாா்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியா் ம.பிரபு, மாவட்ட சமூக நல அலுவலா் பிரேமலதா, கல்லூரி முதல்வா் வான்மதி, மாநகர திமுக செயலா் ஆனந்தசேகரன் மற்றும் சமூக நலத்துறை அலுவலா்கள்,
கல்லூரி மாணவிகள் பங்கேற்றனா்.

