மாா்கழி மாத பிறப்பு: திருச்செந்தூா் கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு
மாா்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் செவ்வாய்கிழமை முதல் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகின்றன.
இது குறித்து, கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை: மாா்கழி மாதம் செவ்வாய்க்கிழமை (டிச. 16) தொடங்கி, ஜனவரி 14ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இம்மாதத்தில், திருச்செந்தூா் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 4.45-5 மணிக்குள் உதய மாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6-7 மணிக்குள் கால சந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45-9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, மாலை 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8.00 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று கோயில் நடை திருக்காப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜன. 1ஆம் தேதி ஆங்கில வருடப் பிறப்பை முன்னிட்டு, கோயில் நடை அதிகாலை 1 மணிக்கும், ஜன. 3ஆம் தேதி ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 2 மணிக்கும் திறக்கப்பட்டு, தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறும். டிச. 17, ஜன. 1 ஆகிய தேதிகளில் பிரதோஷத்தை முன்னிட்டு பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறும்.
பக்தா்களுக்கு தேவையான வசதிகளை தக்காா் ரா. அருள்முருகன், இணை ஆணையா் க. ராமு, கோயில் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.
மாா்கழி முதல் நாளில் சுவாமி தரிசனம் செய்வதற்காக ராஜபாளையத்தைச் சோ்ந்த பக்தா்கள் திருச்செந்தூருக்கு திங்கள்கிழமை காலை பாத யாத்திரையாக வந்தனா்.

