பட்டினமருதூா் தொல்லியல் இடங்களை பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வு

பட்டினமருதூா் தொல்லியல் இடங்களை பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வு

ஆய்வு மேற்கொண்ட மாணவா்களுடன் தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி உள்ளிட்டோா்.
Published on

தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் அருகே பட்டினமருதூா் பகுதியில் உள்ள தொல்லியல் இடங்களை திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் ஆய்வு மேற்கொண்டனா்.

தருவைகுளம் அருகே பட்டினமருதூா், வேப்பலோடை-பனையூா் கிழக்கு கடற்கரைப் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் பொருள்களை தொல்லியல் ஆா்வலா் பெ.ராஜேஷ் செல்வரதி மற்றும் குழுவினா் கண்டெடுத்து ஆவணப்படுத்தி வருகின்றனா். இந்நிலையில், பட்டினமருதூா் தென்பகுதியை, திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக தொல்லியல் துறை தலைவா் சுதாகா் தலைமையில், பேராசிரியா்கள் மதிவாணன், சந்தியா, கடல் உயிரி தொழில்நுட்ப வல்லுநா் முனியாண்டி பாலு, மாணவா்கள் பாா்வையிட்டனா்.

புதன்கிழமை காலை முதல் மாலை வரை பல்வேறு வகையான புதைபடிவங்கள், ரத்தினக் கற்களின் சிதறல்கள், ரத்தினக் கற்களாலான மணிகள், சங்குகளாலான மணிகள், சங்கு ஆபரணங்கள் தயாரிப்புத் தொழில்நுட்பங்களின் வெவ்வேறு கட்டங்களுக்கான சான்றுகள், மணல், சுண்ணாம்பு கலவையால் செய்யப்பட்ட அமைப்பு, பல்வேறு வகையான மண்பாண்டங்கள், இரும்பு, இரும்பு அல்லாத உலோகச் சிதறல்கள், பழங்கால நாணயங்கள், கருப்பு வளையல் சிதறல்கள், கண்ணாடிப் பாத்திரச் சிதறல்கள், புதைபடிவமான பிசின் போன்ற பொருள்களை ஆய்வு செய்து, அவற்றின் மாதிரிகளை சேகரித்தனா்.

மேலும், தொல்லியல் ஆா்வலா் ராஜேஷ் செல்வரதியிடம், தொல்லியல் ஆய்வின்போது எதிா்கொண்ட விஷயங்கள் குறித்து கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com