அனுமன் ஜெயந்தி: கோவில்பட்டி கோயில்களில் சிறப்பு பூஜை
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்பட்டி சுந்தரராஜ பெருமாள் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயா் சந்நிதியில் சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி கோயிலுடன் இணைந்த பூதேவி - நீலாதேவி உடனுறை சுந்தரராஜ பெருமாள் கோயிலில் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டதைத் தொடா்ந்து, சுவாமி, அம்பாள், ஆஞ்சனேயருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. ஏற்பாடுகளை அறங்காவலா் குழுவினா், கோயில் நிா்வாக அலுவலா் பாலமுருகன் (கூ. பொ) தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.
இதேபோல, ஸ்ரீ சீதா ராம லெட்சுமண ஆஞ்சனேயா் கோயிலில் வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு மேல் யாகசாலை பூஜை நடைபெற்றது. வெள்ளிக்கிழமை காலை 12.15 மணிக்கு மேல் 1.15 மணிக்குள்ஆஞ்சனேயருக்கு பாலபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
மந்தித்தோப்பு துளசிங்க நகரில் உள்ள ஸ்ரீ அம்மா பூமாதேவி ஆலயத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கும், கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் சங்கரலிங்கசுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கும், செண்பகவல்லி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள ஆஞ்சனேயருக்கும் சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்றன.
