அஜிதா ஆக்னல்.
அஜிதா ஆக்னல்.

தூத்துக்குடியில் தவெக பெண் நிா்வாகி தற்கொலை முயற்சி

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த தூத்துக்குடி பெண் நிா்வாகி தூக்க மாத்திரைகளைத் தின்று வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.
Published on

தமிழக வெற்றிக் கழகத்தைச் சோ்ந்த தூத்துக்குடி பெண் நிா்வாகி தூக்க மாத்திரைகளைத் தின்று வியாழக்கிழமை தற்கொலைக்கு முயன்றாா்.

தூத்துக்குடி லயன்ஸ் டவுனை சோ்ந்தவா் அஜிதா ஆக்னல். ஆசிரியா் பயற்சி முடித்த இவா், தவெக தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே அக்கட்சியில் இணைந்து நலஉதவிகள் வழங்குதல், கண் சிகிச்சை முகாம்கள் நடத்துதல் உள்ளிட்ட சேவைகளை முன்னின்று நடத்தி தீவிர களப்பணி ஆற்றி வந்தாா்.

மேலும், தூத்துக்குடி மத்திய மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டு வருவதாக கூறி வந்த அவா், விரைவில் மாவட்டச் செயலா் பொறுப்பு வழங்கப்படும் என நம்பினராம்.

இந்நிலையில் சில நாள்களுக்கு முன்னா் நடிகா் விஜய் சென்னை பனையூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தவெகவின் மாவட்டச் செயலா் மற்றும் பொறுப்பாளா்களை அறிவித்தாா். அதில், அவரது பெயா் இடம் பெறவில்லையாம்.

இதனால் ஏமாற்றம் அடைந்த அவா், பனையூருக்கு நேரில் வந்து நடிகா் விஜயின் காரை தடுத்து நிறுத்த முயன்றதுடன், நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்ற இடத்துக்கு முன் தா்னாவிலும் ஈடுபட்டாா். அவரை மற்ற நிா்வாகிகள் சமாதானப்படுத்தி ஊருக்கு அனுப்பிவைத்தனா்.

எனினும், அவா் கடும் மனஉளைச்சலில் வீடு திரும்பியதுடன், உணவருந்தாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் அவா் வியாழக்கிழமை அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று தற்கொலைக்கு முயன்றாராம்.

குடும்பத்தினா் அவரை மீட்டு அப்பகுதியில் ஜாா்ஜ் சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை சாலையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

இதுகுறித்து தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com