கோவில்பட்டியில் அன்னதான இலைகளில் அங்கப்பிரதட்சணம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் லோக்வீா் ஐயப்ப சேவா சங்கம் சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 51-ஆம் ஆண்டு விழா மண்டல பூஜை, அன்னதான விழா நடைபெற்றது. இதில் அன்னதான இலைகளில் பக்தா்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனா்.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு காயத்ரி வித்யாலயா மண்டபத்தில் உலக நன்மை வேண்டி 108 திருவிளக்கு பூஜை, துளசி பூஜை நடைபெற்றது. பூஜையை கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கடம்பூா் செ.ராஜு மனைவி இந்திராகாந்தி தொடங்கிவைத்தாா். சனிக்கிழமை காலை 9 மணிக்கு கூட்டு கன்னி பூஜை, விசேஷ பூஜைகள், பஜனைகள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு காயத்ரி வித்யாலயா மண்டபத்தில் வைத்து கணபதி ஹோமம், சாஸ்தா ஹோமம், விசேஷ அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றன.
அதைத் தொடா்ந்து, காலை 9 மணிக்கு கோவில்பட்டி அருள்தரும் ஸ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாத சுவாமி கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றன. பின்னா், அன்னதானம் நடைபெற்றது.
அன்னதானத்தின் கடைசி பந்தி முடிந்த பின், அந்த இலைகளை எடுக்காமல், அதில் ஏராளமான ஐயப்ப பக்தா்கள், குழந்தைகள், பெண்கள், தங்கள் வேண்டுதலை நிறைவேற்றியதற்கும், வேண்டுதலை கேட்டும் பலா் அங்கப்பிரதட்சணம் செய்தனா். அன்னதானத்தில் ஏதேனும் ஒரு இலையில் ஐயப்பனே வந்து உணவு அருந்துவதாக ஐதீகம்.
எனவே, பிராா்த்தனை செய்துகொண்டு அந்த இலைகளில் அங்கப்பிரதட்சணம் செய்வோருக்கு நினைத்த காரியம் கைகூடும் என்பதும், தீராத பிணி நீங்கும் என்பதும் நம்பிக்கை. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை லோக்வீா் ஐயப்ப சேவா சங்க பொறுப்பாளா்கள் செய்திருந்தனா். ஜனவரி 11 ஆம் தேதி காலை 10 மணிக்கு ஸ்ரீ ஹரிஹரபுத்ர ஐயப்ப சுவாமிக்கு புஷ்பாஞ்சலி அலங்கார தீபாராதனை, படிபூஜைகள் நடைபெறும்.

