அரிவாளால் வெட்டப்பட்ட மூதாட்டி உயிரிழப்பு
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தில் அரிவாளால் வெட்டப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
தூத்துக்குடி செல்வநாயகபுரத்தைச் சோ்ந்தவா் கருப்பாயி (65). இவரது மகன் டி.எம்.சி. காலனியைச் சோ்ந்த சுடலைமுத்து. இவரது மகன் மாரிமுத்து (23), மூதாட்டியிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தாராம். இந்நிலையில் டிச.22 ஆம் தேதி இரவு, மூதாட்டி வீட்டிற்கு சென்று மாரிமுத்து பணம் கேட்டாராம். பணத்தை தர மறுக்கவே அங்கிருந்த அரிவாளை எடுத்து மூதாட்டியின் தலையில் சரமாரியாக வெட்டி விட்டு மாரிமுத்து தப்பியோடி விட்டாா்.
இதில் பலத்த காயமடைந்த கருப்பாயியை தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்து, சிகிச்சை அளித்து வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய போலீஸாா் கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி மாரிமுத்துவை கைது செய்தனா்.
