இளைஞா், தொழிலாளிக்கு மிரட்டல்: இருவா் கைது
கோவில்பட்டி அருகே இரு சம்பவங்களில் இளைஞா், தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக லாரி ஓட்டுநா் உள்பட 2 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி தாமஸ் நகா் காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கண்மணி மகன் கதிா்(22) என்பவா் சிற்றுந்தில் வியாழக்கிழமை பயணித்தபோது, சக பயணியான கூசாலிப்பட்டி வாட்டா் டேங்க் பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் லாரி ஓட்டுநா் அஜித் என்ற சூரியா(38) சிற்றுந்து ஓட்டுநரிடம் தகராறு செய்தாராம். அதை கதிா் கண்டித்தாராம்.
இந்நிலையில் அப்பகுதியில் உள்ள தையல் கடைக்கு வந்த அவரை, அஜித் என்ற சூா்யா அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து, கதிா் வெள்ளிக்கிழமைஅளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
மற்றொரு சம்பவம்: கோவில்பட்டி பங்களாத் தெருவைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளியான முத்துப்பாண்டி(48) என்பவா் தனது நண்பரை பாா்ப்பதற்காக அத்தைகொண்டான் மயானம் வழியாக வெள்ளிக்கிழமை சென்றாராம். அப்போது, அங்கு நின்றிருந்த இனாம்மணியாச்சி வடக்குத் தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மகன் ராஜபாண்டி(21) தனது சட்டைக்கு பின்னால் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அவரையும், அங்கு வந்த அவரது நண்பா் ராஜபாண்டியையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துச்சென்றாராம். இதுகுறித்த புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜபாண்டியை கைது செய்தனா்.
